Friday, 19 April 2019

இவர்களுக்கு மன்னியும்!

"அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்" (லூக்கா 23:34).

இயேசு சிலுவையிலே அவமானப்படுத்தப்பட்டு, காயப்படுத்தப்பட்டு, மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு, ஜீவனை இழக்கும் தருவாயிலும், "பிதாவே இவர்களுக்கு மன்னியும்" என்று மன்றாடினார். மிகக்கடினமான சூழ்நிலையிலும், வேதனைகளுக்கு மத்தியிலும் அதற்குக் காரணமானவர்களை மன்னிக்கும் சுபாவம், இயேசுகிறிஸ்துவை மேன்மையடையச் செய்தது.

சில சமயங்களில், உங்களுக்கு மற்றவர்களைப் பழிக்குப்பழி வாங்கும் எண்ணமும், தீமைக்குத் தீமை செய்யும் நினைவுமே மேலோங்கி நிற்கும். இது மனித சுபாவம் தான். ஆனாலும், இயேசுகிறிஸ்து மனித ரூபமெடுத்து சிலுவையில் மரிக்கும்போது, பகைவர்களை மன்னிக்கும் முன்மாதிரியை உங்களுக்குக் காண்பித்தார்.

உங்களில் அன்பு கூருவதற்காக, இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் பிறந்தார். அவர் மரணத் தருவாயிலும், மன்னிக்கும் சுபாவமுள்ளவராகவே காணப்பட்டார். இது, அவர் விட்டுச் சென்ற அடிச்சுவடு. உங்களில் அது பிரதிபலிக்கும்படியாக, அவர் காட்டிய பாதை. நீங்கள் அதற்கூடாக நடந்து செல்லுகிறீர்களா? அல்லது அதை விட்டு வழி விலகிச் செல்லுகிறீர்களா?

இயேசுகிறிஸ்து ஒருவரே, உங்கள் பாவங்களை மன்னிக்கிறவர். அவரின் நாமத்தினிமித்தம், உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. ஏனெனில் எல்லா நாமங்களுக்கும் மேலான நாமம் கிறிஸ்துவின் நாமம். "இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது" (எபி. 9:22).

உங்கள் வாழ்வில் ஏற்படும் தவறுகளிலும் உங்களுக்கு மன்னிப்பு அவசியமாய் இருக்கிறது. அது உங்கள் குடும்ப வாழ்க்கையானாலும் சரி, வேலை இடங்களானாலும் சரி, உறவினர் மத்தியிலும், நண்பர்களுக்கிடையேயானாலும் சரி, உங்கள் தவறுகளை நீங்கள் உணர்ந்து மனந்திரும்பும்போது, கர்த்தர் உங்களை மன்னித்து ஆசீர்வதிப்பார்.

"குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை" என்று நீதி. 19:11 சொல்லுகிறது. நீங்கள் மற்றவர்களை மன்னிக்கும்போது, இயேசுகிறிஸ்து உங்கள் குற்றங்களை மன்னித்து, பரலோகத்தை நீங்கள் சுதந்தரிக்கும்படிச் செய்வார்.

"மனுஷனுடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்." (மத். 6:14,15).

தேவபிள்ளைகளே, மற்றவர்கள் உங்களுக்கு எதிராக செய்கிற தவறுகளை நீங்கள் மன்னித்து மறந்துவிடவேண்டும். அதின் கசப்பு, அடிமனதினில் வேரூன்றி ஆழமாய் பதிய விடவேக் கூடாது. உங்களுக்குள் எப்படிப்பட்ட சுபாவங்கள் உண்டு? மற்றவர்கள் செய்த குற்றங்கள், தவறுகள், பிழைகளை மன்னிக்கிறவர்களாக இருக்கிறீர்களா?

நினைவிற்கு :- "நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது, ஒருவன் பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள். நீங்கள் மன்னியாதிருப்பீர்களானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவும் உங்கள் தப்பிதங்களை மன்னியாதிருப்பார்" (மாற்கு 11:25,26). 

No comments:

Post a Comment

உழைப்பாளியான ரூபவதி

"செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்;…" - பிரசங்கி 9:10   செல்வமும், களியாட்டுகளும், புகழும், பெருமைய...