சுமார் ஐநூறு வயதான ஒரு கிழவர் அமர்ந்து மரங்களை முறித்தும், சீராக்கியும் ஒரு படகு செய்கிறேன் என்று அமர்ந்தால் என்ன நினைப்பீர்கள் ? அதுவும் தண்ணீர் வரவே வாய்ப்பு இல்லாத ஒரு கட்டாந்தரையில் படகு உண்டாக்கத் துவங்கினால் ? அப்படித் தான் இருந்திருக்கும் நோவா படகு செய்ய ஆரம்பித்த போது !
அந்த காலகட்டத்தில் தான் அவருக்கு சேம், காம், எபேத்து எனும் மூன்று பிள்ளைகள் பிறந்திருந்தார்கள். பூமியில் மக்கள் பலுகிப் பெருகத் துவங்கியிருந்தார்கள். பாவமும் மக்களிடையே பெருகத் துவங்கியிருந்தது. கோபமான கடவுள் பூமியை அழிக்க வேண்டும் என முடிவு செய்கிறார்.
நோவா மட்டும் ஒரு நல்ல மனிதராக இருந்தார். கடவுள் அவரிடம் “ நீ ஒரு பேழை செய்ய வேண்டும்” என்றார். பூமியை தண்ணீரால் அழிக்க வேண்டும், நோவாவின் குடும்பத்தினரையும், உயிரின வகைகளையும் காப்பாற்ற வேண்டும் என்பதே கடவுளின் திட்டம்.
பேழை எப்படி இருக்க வேண்டும் என்பதையும் கடவுளே சொல்கிறார். நீளம் 300 முழம், அகலம் 50 முழம், கோபர் மரத்தில் செய்ய வேண்டும், உள்பக்கம் என்ன பூசவேண்டும் என முழு கட்டுமான விவரங்களையும் கொடுக்கிறார்.
நோவா பேழை செய்ய ஆரம்பித்தார். சுமார் நூறு ஆண்டுகள் அவர் பேழை செய்தார். குறிப்பிட்ட நாள் வந்தது. நோவாவும் குடும்பமும் கடவுள் சொன்னதும் பேழைக்குள் செல்கின்றனர். விலங்கினங்களை கடவுளே பேழைக்குள் வரவைக்கிறார். பேழையின் கதவையும் கடவுளே மூடிவிடுகிறார். ஏழு நாட்களில், மண்ணுலகில் வெள்ளப் பெருக்கு தொடங்கியது. பெருமழை பொழிந்தது.
நாற்பது இரவும், நாற்பது பகலும் அடைமழை. மலைகளுக்கும் மேலே பல முழம் உயரத்தில் தண்ணீர். நூற்றைம்பது நாட்கள் தண்ணீர் பெருக்கு. பூமி ஒட்டு மொத்தமாகக் கழுவப்பட்டது. எல்லா உயிரினங்களும் மாண்டு போயின ! தண்ணீர் வற்றுவதற்கு மீண்டும் ஒரு நூற்றைம்பது நாட்கள். கடவுள் அவர்களை வெளியே வரச் சொன்ன போது அவர்கள் வெளியே வந்தார்கள்.
உலகில் அதுவரை வாழ்ந்த எல்லா உயிரினங்களும், மனிதர்களும் அழிக்கப்பட நோவானின் சந்ததி மட்டுமே மிஞ்சியது ! வெளியே வந்ததும் முதல் வேலையாக, நோவா கடவுளுக்குப் பலி செலுத்தி நன்றியை வெளிப்படுத்தினார்.
கிறிஸ்தவம் நோவாவை மிக முக்கியமான ஆன்மீகத் தலைவராகப் பார்க்கிறது.
“நீ ஒரு பேழையைச் செய்” என கடவுள் சொன்னபோது, எதற்காக பேழை செய்ய வேண்டும் ? ஏன் கோபர் மரம் ? ஏன் இந்த குறிப்பிட்ட அளவு ? என எந்த ஒரு கேள்வியையும் நோவா கேட்கவில்லை.
தனது வேலைக்கு என்ன கூலி கிடைக்கும் ? யார் தனக்கு மரங்கள் கொண்டு தருவார்கள் ? யார் கீல் பூசி உதவுவார்கள் என்றெல்லாம் நோவா கணக்குப் போடவில்லை.
பேழை செய்யச் சொன்னதும், கர்வம் கொண்டு தானே ஒரு கட்டுமானப் பணியாளன் ஆகிவிடவில்லை. கடவுள் சொன்ன அளவுகளை அப்படியே பின்பற்றுகிறார். அகலத்தைப் போல ஆறு மடங்கு அளவு நீளம் கொண்டது அந்தப் பேழை. இன்றைய கப்பல் தயாரிப்புகளின் அடிப்படை இந்த அளவு தான் என்கிறது “லைஃப் அப்ளிகேஷன் பைபிள் ஸ்டடி” நூல்.
‘லாஜிக்’ பார்த்தோ, சுய அறிவை வைத்தோ நோவா எதையும் செய்யவில்லை. கடவுளையே சார்ந்திருந்தார். மழை தொடங்குவதற்கும் 7 நாட்களுக்கு முன்னே பேழையில் சென்றவர், மழை நின்றபின்பும் கடவுள் சொல்லும் வரை பேழையை விட்டு வெளியே வரவில்லை !
நிகழாத ஒரு செயல் நிகழலாம் என்பதை நோவா நம்பினார்.. உலகில் அன்று வரை மழை பெய்ததில்லை. பூமியின் பனி மட்டுமே பூமியைச் செழிப்பாக்கிக் கொண்டிருந்தது.
வரலாற்று அறிஞர்கள் நோவா 480வது வயதில் பேழை செய்ய ஆரம்பித்ததாய் சொல்கிறார்கள். அப்படியெனில் 120 ஆண்டுகளின் உழைப்பு அதில் உண்டு. முதல் இருபது வருடங்கள் வேலை செய்கையில் அவருக்குக் குழந்தைகள் இல்லை.
வேலை சட்டென முடியவில்லையே எனும் எரிச்சலும், கோபமும் அவரிடம் இல்லை. கடவுள் பேழை செய்யச் சொன்னார். ஆனால் அதன் பின் சுமார் நூறு ஆண்டுகள் கடவுள் பேசியதாய் வரலாறு இல்லை. இருந்தாலும் நோவா தனது பணியிலிருந்து பின் வாங்கவில்லை.
நோவா பேழை செய்தபோது உயிரினங்கள் எப்படி உள்ளே வரப் போகின்றன என்பதைக் குறித்துக் கவலைப்படவில்லை. அதை கடவுளிடமே விட்டு விட்டார். எல்லாம் கடவுளின் திட்டப்படி நடந்தன.
பேழையிலிருந்து வெளியே வந்ததும் முதல் வேலையாக கடவுளுக்குப் பலி செலுத்துகிறார் நோவா.. கடவுளே எல்லாவற்றிலும் முதன்மையாய் இருக்க வேண்டும் என்பதிலிருந்து அவர் பின் வாங்கவில்லை.
நோவாவின் வாழ்விலிருந்து இந்தப் பாடங்களைக் கற்றுக் கொள்வோம் !
No comments:
Post a Comment