Thursday, 29 November 2018

என்னுடையவைகள்!

"சகல காட்டுஜீவன்களும், பர்வதங்களில் ஆயிரமாயிரமாய்த் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள்" (சங். 50:10).

கர்த்தர் சொன்னார், "மலைகளிலுள்ள பறவைகளையெல்லாம் அறிவேன்; வெளியில் நடமாடுகிறவைகளெல்லாம் என்னுடையவைகள். நான் பசியாயிருந்தால், உனக்குச் சொல்லேன்; பூமியும், அதின் நிறைவும் என்னுடையவைகளே"
(சங். 50:11,12).

சகலவற்றையும் கர்த்தர் சிருஷ்டித்தபடியால், எல்லாம் அவருடையது. நாம் அவருடைய பிள்ளைகள். மட்டுமல்ல, சுதந்தரவாளிகளாகவுமிருக்கிறோம். தகப்பன் மனமிரங்கி, தன் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுப்பதுபோல, கர்த்தர் நமக்கு இரங்கி, சகலவற்றையும் தந்தருளுவார். நீங்கள் அவருடைய பிள்ளைகளானால், உரிமையோடு கர்த்தரிடத்திலே கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம். அவர் உங்களை ஆசீர்வதித்து, சகலவற்றின்மேலும் அதிகாரத்தைத் தந்தருளுவார்.

தேவபிள்ளைகளைக் குறித்து தாவீது சொல்லும்போது, "உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர். ஆடுமாடுகளெல்லாவற்றையும், காட்டுமிருகங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மச்சங்களையும், கடல்களில் சஞ்சரிக்கிறவைகளையும், அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர் என்றார்" (சங். 8:6-8).

கர்த்தர், தம்முடைய பிள்ளைகளுக்கு வேண்டிய பொருளாதாரம், செல்வம், செல்வாக்கு சகலவற்றையும் தந்தருளுகிறார். வேலை செய்ய திறன், வேலை செய்ய ஞானம், வேலை செய்யக்கூடிய உற்சாக மனது, உழைப்பதற்கான கிருபைகளைத் தருகிறவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.

ஒருவர், நாம் உழைக்காமலே, கர்த்தர் எல்லாவற்றையும் தந்துவிடுகிறார் என்பதற்கு, இயேசு கிறிஸ்து சொன்ன ஒரு வார்த்தையைப் பிடித்துக்கொண்டார். "ஆகாயத்துப் பறவைகளைப் பாருங்கள்! அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதுமில்லை. ஆனாலும் அவைகளையும் உங்கள் பரம பிதா பிழைப்பூட்டுகிறார்" என்று சொன்னார்.

உண்மைதான். ஆனால் அந்தப் பறவைகளைப் பாருங்கள்! அவை, கூட்டிலே உட்கார்ந்துகொண்டிருப்பதில்லை. காலையில் எழுந்ததும், சுறுசுறுப்பாய் இரையைத் தேடிப் போகிறது. இடைவிடாமல் வருகிறதும், தன் குஞ்சுகளை போஷிக்கிறதும், அவைகளை கவனித்துக்கொள்ளுகிறவைகளுமாயிருக்கின்றன.

தேவபிள்ளைகளே, உங்களால் முடிந்தவரை நன்றாக உழைத்து, குடும்பத்தைப் போஷித்து, பராமரிக்க வேண்டியது உங்கள் கடமை. "திரை கடலோடியும் திரவியம் தேடு" என்றார்கள், நம்முடைய முன்னோர்கள். வேதம் வாக்களித்து, "உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய்; உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்" (சங். 128:2) என்று சொல்லுகிறது.

இங்கே பாருங்கள்! கையின் பிரயாசத்தைக் குறித்து, ஆண்டவர் சொல்லுகிறார். பிரயாசிக்க வேண்டியது உங்களுடைய கடமை. யாக்கோபு, தன் மனைவிகளுக்காகவும், பிள்ளைகளுக்காகவும் எவ்வளவு பிரயாசித்து உழைத்தார் என்பதை ஆதி. 31:42-ல் வாசிக்கலாம். ஜெபித்து, உழைத்து, ஆசீர்வாதத்தையும், செல்வத்தையும் பெற்றுக்கொள்ளுங்கள்.

நினைவிற்கு :- "மனுஷர் யாவரும் புசித்துக் குடித்துத் தங்கள் சகலப் பிரயாசத்தின் பலனையும் அநுபவிப்பது, தேவனுடைய அநுக்கிரகம்" (பிர. 3:13). 

No comments:

Post a Comment

உழைப்பாளியான ரூபவதி

"செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்;…" - பிரசங்கி 9:10   செல்வமும், களியாட்டுகளும், புகழும், பெருமைய...