Thursday, 3 January 2019

கல்வாரி இயேசுவின் இரத்தம் ஜெயம்

உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்துவந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே. -

• (1பேதுரு 1: 18-19).

ஒரு நாள் ஒரு போதகர் ஒரு பறவை கூண்டை கையில் எடுத்து கொண்டு வந்து, பிரசங்க பீடத்தண்டை வைத்தார். சபையார் எல்லாரும் எதற்கு அதை அங்கு கொண்டு வந்தார் என்று அவரையே நோக்கி கொண்டிருந்தார்கள். போதகர் பேச ஆரம்பித்தார். அவர் நேற்றைய தினம் வெளியே நடந்து கொண்டிருந்தபோது, ஒரு சிறுவன் ஒரு பறவை கூண்டையும் அதில் மூன்று பறவைகளையும் பிடித்து கொண்டு நடந்து கொண்டிருப்பதை கண்டார். அதை பின்வருமாறு கூற ஆரம்பித்தார்:

'அந்த சிறுவனிடம், 'மகனே, நீ என்ன கையில் வைத்திருக்கிறாய்?'  என்று கேட்டேன், அதற்கு அந்த சிறுவன், 'மூன்று வயதான பறவைகளை இந்த கூண்டில் வைத்திருக்கிறேன்' என்றான். அதற்கு நான் 'இதை கொண்டு பொய் என்ன செய்ய போகிறாய்?' என்று கேட்டேன். அதற்கு அவன், 'அவைகளை கொண்டு நான் என் பொழுதை செலவழிப்பேன், அவைகளின் இறக்கையை பிடுங்குவேன், ஒன்றோடொன்று சண்டையிட வைப்பேன்' என்றான். அதற்கு நான், 'சரி எத்தனை நேரம் அதை செய்து கொண்டிருப்பாய், உனக்கு போர் அடித்த பின் அதை என்ன செய்வாய்?' என்று கேட்டதற்கு அவன், 'எனக்கு சில பூனைகளை தெரியும், அவைகளிடம் கொண்டு போய் விடுவேன், அவைகள் இவைகளை சாப்பிட்டு விடும்'  என்றான். அப்போது நான், 'மகனே இதை நான் வாங்கி கொள்ள வேண்டுமானால், உனக்கு எவ்வளவு காசு தர வேண்டும்' என்று கேட்டேன், அதற்கு அவன், 'சே, இந்த பழைய, ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாத பறவைகளை வைத்து என்ன செய்ய போகிறீர்கள்' என்று கேட்டான், அதற்கு நான் 'நீ எவ்வளவு என்று சொல்' என்று கேட்டேன். அவன் '50 ரூபாய்கள்' என்றவுடன், நான் கொடுத்து வாங்கி வந்து, இன்று வெளியே காணப்படும் மரத்தில் விடுதலையாக பறக்க விட்டேன், அவை இருந்த கூண்டு தான் இது' என்று விளக்கினார்.

பின்னர், பின்வரும் காரியத்தையும் கூற ஆரம்பித்தார்: ஒரு நாள் இயேசு கிறிஸ்துவும் பிசாசும் பேச ஆரம்பித்தார்கள். பிசாசு அப்போது தான் உலகத்திலிருந்து வந்திருந்தான். மிகவும் தெம்பொடும் பெருமையோடும் அவன் இருந்தான், இயேசுகிறிஸ்துவை பார்த்தவுடன், அவன் 'ஐயா, பார்த்தீர்களா, என்னிடம் எத்தனை பேர் மாட்டி கொண்டிருக்கிறார்கள் என்பதை? நான் ஒரு சிறு பொறியைதான் வைத்தேன், அதிலே மாட்டி கொண்டவர்கள் எத்தனை பேர் பாரும்' என்று பெருமையோடு பேசினான். அதற்கு இயேசுகிறிஸ்து, 'நீ அவர்களை வைத்து என்ன செய்ய போகிறாய்?' என்று கேட்டார். 'ஹா! என்ன செய்ய போகிறேன் தெரியுமா? அவர்களுக்கு திருமணம் செய்ய போதித்து, அவர்களை விவாகரத்து செய்ய வைப்பேன், ஒருவரையொருவர் பட்சித்து, சண்டையிட்டு வாழ்வை சீர்குலைப்பேன், அவர்களை எல்லாவித பாவங்களிலும் விழ வைத்;து, கடைசியில் எரிகிற அக்கினி கடலில் என்னோடு கூட எப்போதும் இருக்க வைக்க போகிறேன்' என்று சொல்லி பயங்கரமாக சிரித்தான். அப்போது இயேசுகிறிஸ்து 'எத்தனை கிரயம் கொடுத்தால் எனக்கு கொடுக்க விரும்புவாய்?' என்று கேட்க, அவன், 'இந்த ஜனம் மிகவும் மோசமானவர்கள், நல்லவர்களே இல்லை, உம்மை ஏற்று கொள்ளவே மாட்டார்கள், உம்மை அடிப்பார்கள், உம்மை துன்புறுத்துவார்கள், உம்மை சிலுவையில் அறைவார்கள், பாடுகளை சகிக்க வைப்பார்கள், இவர்களையா நீர் கிரயம் கொடுத்து வாங்க போகிறீர்?' என்று கேட்டான், அதற்கு இயேசு,    'நீ விலைக்கிரயம் மாத்திரம் சொல்' என்று உறுதியுடன் கேட்க அவன், 'உம்முடைய எல்லா கண்ணீரும், எல்லா இரத்தமும்' என்றான். இயேசுகிறிஸ்து அதை கிரயமாக அவனுக்கு கொடுத்து, நம்மை அவனிடமிருந்து மீட்டார்.

'உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்துவந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே என்று வசனம் நமக்கு போதிக்கிறது. கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே'         -(1 கொரிந்தியர் 6:20) என்று வேதம் நமக்கு சொல்கிறது. எந்த கிரயம்? இயேசுகிறிஸ்துவின் மாசில்லாத குற்றமில்லாத, விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டிருக்கிறோம்.

இயேசுகிறிஸ்து நம்மை விலைக்கிரயம் கொடுத்து வாங்கி விட்டபடியால், நாம் பிசாசிற்கு இனி அடிமைகளில்லை. அவன் நம்மை அவன் இஷ்டத்திற்கு ஆட்டுவிக்க முடியாது. நம்மை பாவத்திற்கு இழுக்க முடியாது. அப்படி அவன் இழுத்து நம்மை பாவத்திற்கு தூண்டும்போது நாம் விழுந்து போவோமானால், நம்மை மீட்டு கொண்ட கிறிஸ்துவுக்கு நாம் எப்படி நன்றியோடு இருக்க முடியும்? நாம் எப்படி வருங் கோபத்திற்கு தப்பித்து கொள்ள முடியும்? கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள் நீதிமான்களாக்கப்பட்டீர்கள் (1கொரிந்தியர் 6:11). அப்படி பரிசுத்தமாக்கப்பட்ட உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள் (வசனம் 19-20). அந்தப்படி நாம் வாழ்ந்து, பிசாசிற்கு எதிர்த்து நின்று கர்த்தருக்கு மகிமையாய் ஜீவிக்க தேவன் தாமே ஒவ்வொருவரையும் பலப்படுத்துவாராக!

விடுதலை தருகின்ற இரத்தம் ஜெயம்
வெற்றிமேல் வெற்றிதரும் இரத்தம் ஜெயம்
பெலவீனம் நீக்கிடும் இரத்தம் ஜெயம்
பெலவானாய் மாற்றிடும் இரத்தம் ஜெயம்

இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்
கல்வாரி இயேசுவின் இரத்தம் ஜெயம்
காருண்ய தேவனின் இரத்தம் ஜெயம்

எங்களை அதிகமாய் நேசித்து வரும் எங்கள் நல்ல தகப்பனே, இயேசுகிறிஸ்துவின் மாசற்ற விலையேறப்பெற்ற திரு இரத்தத்தினால் எங்களை உமக்கென்று மீட்டு கொண்டீரே உமக்கு நன்றி. அந்த இரத்தத்தினால் நாங்கள் சாத்தானை ஜெயிக்கவும், வெற்றி மேல் வெற்றி எடுக்கவும், நீர் பாராட்டுகிற கிருபைக்காக நன்றி. பிசாசானவன் எங்களை பாவத்திற்கு அடிமைகளாக்காதபடி, எங்களை பெலவானாய் மாற்றுகிற கிறிஸ்துவின் இரத்தத்திற்காக நன்றி. சோர்ந்து போய், பிசாசின் தந்திரங்களுக்கு இடம் கொடுத்து, பாவத்தில் விழுந்து போன ஒவ்வொரு விசுவாசியையும் இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தால், பிசாசின் மேல் வெற்றி எடுக்கிறவர்களாகவும் சாத்தானை ஜெயிக்கிறவர்களாகவும் மாற்றும்.  எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி.  இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே

ஆமென் அல்லேலூயா!.

தாழ்மையின் மேன்மை!

"கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்; மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார்"
(சங். 138:6).

தாழ்மையின் ஆசீர்வாதங்களை, தேவனுடைய பிள்ளைகளாகிய நீங்கள் அறிந்து கொண்டீர்களென்றால், கர்த்தரிடத்திலிருந்து கிருபையை பெற்றுக்கொள்வீர்கள். தாழ்மையுள்ளவர்களை அவர் நோக்கிப் பார்க்கிறவர். மாத்திரமல்ல, தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபையும் அளிக்கிறார்.

"இந்தியாவின் பிதா" என்று அழைக்கப்படுகிற, மகாத்மா காந்தியின் வாழ்க்கையைப் பாருங்கள். அவருடைய தாழ்மை எத்தனை பெரியது! அவர் புற ஜாதியாராய் இருந்தபோதிலும்கூட, கர்த்தர் அவருடைய தாழ்மையை நோக்கிப் பார்த்தார். தேசத்திலே, அவரை உயர்த்தி ஆசீர்வதித்தார்!

ஒரு முறை மகாத்மா காந்தி, இந்தியாவின் தென்பகுதியிலே சுற்றுப்பிரயாணம் செய்தபோது, அங்கே ஏழ்மையின் அடித்தளத்தில் இருந்த ஏழை மக்களைக் கண்டார். அவர்களில் பெரும்பாலானோருக்கு, உடுக்க வஸ்திரம்கூட இல்லாமலிருந்தது. தானும், ஏழை மக்களோடு இணைந்து கொள்ள விரும்பிய அவர், அன்று முதல் தன்னுடைய விலையுயர்ந்த வெளிநாட்டு உடைகளை ஒதுக்கித் தள்ளினார்.

தாழ்மையான இந்திய உடைகளையே, அவர் அணியத் தீர்மானித்தார். ஒரு பெரிய செல்வந்தரும், மிக அதிகமாய்ப் படித்தவரும், பல தேசங்களைச் சுற்றுப்பிரயாணம் செய்தவருமான அவர், தாழ்மையைத் தரிக்க சித்தமானார்.

தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களை நோக்கிப் பார்க்க வேண்டுமா? கர்த்தருடைய கண்களில், உங்களுக்கு கிருபை கிடைக்க வேண்டுமா? தாழ்மையைத் தரித்துக்கொள்ளுங்கள். உலகமெங்கும் சுற்றிப் பார்க்கிற கர்த்தருடைய கண்கள், தாழ்மையுள்ளவர்களையே நோக்கிப் பார்க்கிறது. அதையே, கர்த்தர் உங்களிடத்தில் கேட்கிறார்.

வேதம் சொல்லுகிறது: "மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்?"
(மீகா 6:8).

மனத்தாழ்மைக்கு ஒரு முன்னோடியை நான் உங்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டுமென்றால், இயேசுகிறிஸ்துவையே அல்லாமல் வேறொருவரையும் உங்களுக்கு முன்பாக நிறுத்த பிரியப்படவில்லை. அவருடைய தாழ்மை ஒன்றையே தியானித்துப் பாருங்கள். பிதாவுக்கு சமமாய் இருந்த மகிமையின் ராஜா, தாழ்மையை தரிக்க சித்தங்கொண்டதினாலே, "அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரண பரியந்தம் அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத் தாமே தாழ்த்தினார்" (பிலி. 2:8).

எவ்வளவு தாழ்மையாய், மாட்டுக் கொட்டகையிலே அவர் பிறந்தார்! எவ்வளவு தாழ்மையாய், தச்சனுடைய வீட்டிலே வளர்ந்தார்! நரிகளுக்குக் குழிகள் இருந்தது; ஆகாயத்துப் பறவைகளுக்கு கூடுகள் இருந்தன. ஆனால், தம்மைத் தாமே தாழ்த்தின கிறிஸ்துவுக்கோ தலைசாய்க்க இடமில்லாதிருந்தது.

இரவல் படகில் நின்று பிரசங்கித்தார். இரவல் கழுதையின் மேல் பிரயாணம் செய்தார். இரவல் கல்லறையிலே அடக்கம்பண்ணப்பட்டார். எத்தனை எளிய வாழ்க்கையை, அவர் தாழ்மையாக வாழ்ந்து காண்பித்தார்! தேவபிள்ளைகளே, தாழ்மையைத் தரித்துக்கொள்ளுங்கள்!

நினைவிற்கு :- "கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்" (யாக். 4:10). 

Wednesday, 2 January 2019

நாத்தான்

சர்வ வல்லமை பொருந்திய தாவீது மன்னனின் முன்னால் வந்து நின்று இறைவாக்கினர் நாத்தான் பேசினார்.

ஒரு நகரில் இரண்டு மனிதர்கள் இருந்தார்கள். ஒருவன் செல்வன். இன்னொருவன் ஏழை. செல்வந்தனிடம் ஏராளமான ஆடு மாடுகள் இருந்தன. அந்த ஏழையிடம் இருந்ததோ ஒரே ஒரு ஆட்டுக்குட்டி. அது அவனோடும், அவனது குழந்தைகளோடும் விளையாடி ஆனந்தமாய் இருந்தது. அந்த ஏழை அதை விலைக்கு வாங்கியிருந்தான். அவனது மடியில் உறங்கி, அவனது பாத்திரத்தில் உண்டு, அது அவனது மகனைப் போலவே இருந்தது.

ஒருநாள் ஒரு வழிப்போக்கன் செல்வந்தனிடம் வந்தான். வழிப்போக்கனுக்கு உணவு தயாரிக்க செல்வந்தன் முடிவு செய்தான். அதற்காக தனது மந்தையிலிருந்து ஆட்டை எடுக்காமல், அந்த ஏழையின் ஒரே ஒரு ஆட்டைக் கொன்று உணவு தயாரித்தான்.

நாத்தான் சொல்லி முடித்ததும் தாவீது  மன்னன் கோபத்தில் எழுந்தான். யாரது ? அவன் சாகவேண்டும். இரக்கமின்றி செயல்பட்ட அவன் யார்  ? சொல்லுங்கள். தாவீது கர்ஜித்தான்.

அது நீ தான் !  நீயே அம் மனிதன். நாத்தான் மன்னனின் முன்னிலையில் நின்று அச்சமின்றி குரலுயர்த்தி, கைநீட்டி அதிகாரமாய்ப் பேச அதிர்ந்து போனான் தாவீது !

இறைவாக்கினர்களின் இயல்பே அது தான். அவர்கள் இறைவனின் வார்த்தைகளை பிறருக்கு எடுத்துரைக்கப் பிறந்தவர்கள். எந்த சபையிலும் நின்றும் உண்மையை உரக்கச் சொல்லத் தயங்குவதில்லை. எந்த மன்னனுக்கு எதிராகவும் குரலுயர்த்த அஞ்சுவதில்லை. கடவுளின் வார்த்தையை மேடைக்கு ஏற்றார்போல மாற்றிப் பேசுவதில்லை.

தாவீது அதிர்ந்து போய் நிற்க நாத்தான் தொடர்ந்தார். அவருடைய குரல் இறைவனின் குரலாய் எழுந்தது.

“இதோ கடவுள் சொல்கிறார். உன்னை இஸ்ரயேலரின் மன்னனாக்கினேன். ஏராளமான மனைவியர் தந்தேன். நீயோ இத்தியனான உரியாவைக் கொன்று அவனுடைய மனைவியை அபகரித்தாய். இனிமேல் உன் குடும்பத்திலிருந்து எனது கோபம் விலகாது.”

நாத்தானின் இறைவாக்கைக் கேட்ட தாவீது மனம் வருந்தினார். “ஐயோ கடவுளுக்கு எதிராய் பாவம் செய்து விட்டேனே” என புலம்பினார்.

நாத்தான் தாவீதைப் பார்த்தார். “நீ மனம் வருந்தியதால் கடவுள் உன்னை மன்னிக்கிறார். ஆனாலும் உனது மீறுதலுக்குத் தண்டனையாக உனக்குப் பிறக்கும் மகன் சாவான்” என்றார்.

தாவீதுக்கும், அவன் அபகரித்த மனைவியாகிய பத்சேபாவுக்கும் ஒரு குழந்தை பிறந்தது. நாத்தான் சொன்னது போலவே அந்தக் குழந்தை நோய்வாய்ப் பட்டு சாகக் கிடந்தது.

தாவீது அந்தக் குழந்தைக்காக சாப்பிடாமல் இருந்து இறைவனிடம் மன்றாடினார். ஏழாவது நாள் குழந்தை இறந்தது. அந்தச் செய்தியை மன்னனிடம் சொல்லவே பணியாளர்கள் அஞ்சினார்கள். ஆனால் செய்தியைக் கேள்விப்பட்ட தாவீது கலங்கவில்லை. எழும்பினார். கடவுளின் வார்த்தை நிறைவேறியதைப் புரிந்து கொண்டார். உணவு சாப்பிட்டார்.

“மன்னரே, குழந்தை உடல்நிலை சரியில்லாமல் இருந்தப்போ சாப்பிடாமல் அழுது புலம்பினீர்கள். குழந்தை இறந்தபின் துக்கம் கொண்டாடாமல் உணவு அருந்தி சகஜ நிலைக்கு வந்திருக்கிறீர்களே ?” என  அவர்கள் ஆச்சரியமாய்க் கேட்டார்கள்.

“குழந்தை இறக்கும் முன் கடவுள் ஒருவேளை மனமிரங்குவார் என உண்ணா நோன்பு இருந்து மன்றாடினேன். இப்போது குழந்தை இறந்து விட்டது, இனி அழுது புலம்பி என்ன ஆகப் போகிறது” என்றார் தாவீது.

தாவீதுக்கும் பத்சேபாவுக்கும் பின்னர் ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை தான் ஞானத்தினால் உலகை ஆண்ட சாலமோன் மன்னன். அப்போது நாத்தான் வந்து அவர்களை வாழ்த்தினார்.

எபிரேய மொழியில் நாத்தான் என்பதற்கு “கடவுள் கொடுத்தார்” என்று பொருள். தாவீது மன்னனிடம் கடைசி வரை இறைவனின் திட்டத்தைப் பகிர்ந்து கொள்பவராக நாத்தான் இருந்தார்.  அதனால் தனக்கும் பத்சேபாவுக்கும் பிறந்த ஒரு குழந்தைக்கு நாத்தான் எனும் பெயரை தாவீது வைத்தார்..

தாவீது மன்னன் கடவுளின் ஆலயத்தைக் கட்ட மாட்டார், சாலமோனே கட்டுவார் என்று இறைவாக்கு உரைத்தவர் நாத்தான் தான். அவரே தான் சாலமோன் மன்னன் அரியணை ஏறவும் முக்கிய காரணமாக இருந்தார்.

இறைவாக்கினர்கள் சில முக்கியமான குணாதிசயங்கள் கொண்டிருந்தார்கள்.

இறைவனோடான நேரடி தொடர்பு அவர்களுக்கு இருந்தது. இறைவன் சொன்னதைச் சொன்னபடி பிறரிடம் பகிர்ந்து கொண்டார்கள்.
இறைவனைத் தவிர எதற்கும் அவர்கள் அஞ்சவில்லை. இழப்புகள், வலிகள், தண்டனைகள் எதுவுமே அவர்களை திசை திருப்புவதில்லை.
உலகம் சார்ந்த எந்த ஆசையையும் அவர்கள் கொண்டிருக்கவில்லை. தங்களை எப்போதுமே அவர்கள் தாழ்த்தி இறைவனையே உயர்த்திப் பிடித்தார்கள்.
தொலை தூரங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளை அவர்கள் இறைவன் அருளால் காணும் தன்மை பெற்றிருந்தார்கள்.
முழு மனதோடு ஒரு விஷயத்தைச் செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள். இரக்கம், மனிதநேயம், பரிவு, இறை சமாதானம், பொறுமை போன்றவை அவர்களிடம் இருந்தது.

பத்சேபா

அது போர்க்காலம், மன்னன் தாவீது போருக்குச் செல்லவில்லை. மாலைப் பொழுதில் குளித்து விட்டுத் தன்னுடைய அரண்மனையின் மாடியில் உலாவிக் கொண்டிருந்தார். அரண்மனைக்கு அருகே ஒரு வீட்டில் இளம் பெண் குளித்துக் கொண்டிருப்பதைக் கண்டார். அவளது அழகில் கிறங்கினார். தனக்குள் மோக எண்ணத்தை வளர்த்துக் கொண்டார்.

உடனே தன்னுடையை பணியாளனை அழைத்தார்.

அதோ அந்த வீட்டில் குளித்துக் கொண்டிருக்கும் பெண் யார் என்று தெரியுமா ?’

தெரியும் மன்னா … அவள் எலியாவின் மகள் பத்சேபா’ பணியாளன் சொன்னான்.

‘எனக்கு அந்தப் பெண்ணைப் பிடித்திருக்கிறது. அவளை அழைத்து வா’ மன்னன் ஆணையிட்டான்.

அப்படியே ஆகட்டும் மன்னா…. ஆனால்…..’ பணியாளன் இழுத்தான்

என்ன ஆனால்…. ‘ தாவீது திரும்பினார்.

‘அவளுக்குத் திருமணம் ஆகிவிட்டது. இப்போது அவள் இத்தியரான ‘உரியா’ என்பவருடைய மனைவி.’, பணியாளன் சொன்னான்.

தாவீதின் மோகம் தணியவில்லை. பத்சேபாவைப் பார்த்தே ஆகவேண்டும் என முடிவெடுத்தான். பத்சேபா வந்தாள். தாவீது அவளுடன் உறவு கொண்டார். பத்சாபா உடைந்த மனதோடு தன்னுடைய இல்லம் சென்றாள்.

பத்சேபாவின் கணவன் உரியா, தாவீதின் படைவீரன். யோவாபு என்னும் தலைமைப் படைத்தலைவனின் கீழ் பணியாற்றிக் கொண்டிருந்தான்.

தாவீதுக்கு பத்சேபா மேல் இருந்த காமம் குறையவில்லை. அவளை எப்படியாவது முழுமையாக அடைந்து விடவேண்டும் என்று ஆசைப்பட்டார். உரியா உயிருடன் இருக்கும் வரைக்கும் தன்னால் அவளை முழுமையாக அடைய முடியாது என்று நினைத்த மன்னன், காலையில் யோவாபுவிற்கு ஒரு மடல் எழுதினார். அதை உரியாவின் கையிலேயே கொடுத்து யோபாவுவிடம் கொடுக்கச் சொன்னார்.

உரியா அதை அப்படியே கொண்டு போய் போர்க்களத்திலிருந்த யோபாவுவின் கைகளில் கொடுத்தான். யோபாவு அதை வாசித்துப் பார்த்தார்.

“போரில் உரியா சாக வேண்டும். எனவே அவனை எதிரிகள் அதிகமாய் இருக்கும் இடத்தில் அனுப்பு. நீ விலகிவிடு”.

மன்னரின் தகவலை யோபாவு வாசித்து முடித்து நிமிர்ந்து பார்த்தார். எதையும் அறியாத உரியா அமைதியாய் நின்றுகொண்டிருந்தார்.

போரில், வீரர்கள் எதிரிகளான அமலேக்கியரின் நகரை சற்றுத் தொலைவிலிருந்தே தாக்கிக் கொண்டிருந்தார்கள்

யோபாவு உரியாவை அழைத்தான்.

“உரியா…. நாம் போர் வியூகத்தைச் சற்று மாற்றுகிறோம்”

“சொல்லுங்கள்… கடைபிடிக்கிறேன்’

“நீ உன்னுடன் சில வீரர்களை அழைத்துக் கொண்டு நகரின் மதில் சுவரை நெருங்க வேண்டும்…. நெருங்கி அங்கிருக்கும் அமலேக்கியரை அழிக்கவேண்டும்… ‘யோபாவு சொன்னான்.

“மதில் சுவரின் மேல் எதிரிகள் இருக்கக் கூடும். இந்த வியூகம் நமக்குத் தான் ஆபத்தாய் முடியும்”

கவலைப்படாதே. நீ மதில் சுவரை நெருங்கும் போது அவர்கள் உங்களைத் தாக்குவதற்காகத் தலையைத் தூக்குவார்கள். அப்போது நாங்கள் அவர்களை இங்கிருந்தே வீழ்த்துவோம்’

யோபாவுவின் விளக்கத்தில் திருப்தியடைந்த உரியா தன்னுடன் சில வீரர்களையும் கூட்டிக் கொண்டு மதில்சுவரை நோக்கி விரைந்தான். நகர மதில் சுவரை நெருங்குகையில், மதில் சுவரின் மேல் காத்திருந்த அமலேக்கியர்கள் மதில்சுவரின் மீதிருந்து கற்களை உருட்டி விட்டார்கள். உரியாவின் படை விலக நேரம் கிடைக்காமல் நசுங்கி அழிந்தது. அதை தூரத்திலிருந்து கவனித்துக் கொண்டிருந்தார் யோவாபு, ஒரு விஷமப் புன்னகையுடன்.

கணவன் இறந்த செய்தி பத்சேபாவுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவள் கதறி அழுதார். தாவீது உள்ளுக்குள் மகிழ்ந்தார். அவர் பணியாளர்களை அழைத்து ‘உரியாவின் மனைவியை இங்கே அழைத்து வாருங்கள்’ என்றார்.

பத்சேபா வந்தாள்.

‘பத்சேபா… கவலைப்படாதே. உரியாவின் மறைவு எனக்கு மிகவும் அதிர்ச்சியாய் இருக்கிறது. இனிமேல் உன்னைக் காப்பாற்றும் கடமை எனக்கு இருக்கிறது. எனவேஇனிமேல் நீ எனக்கு மனைவியாகி என்னுடன் இரு” என அவளை  மனைவியாக்கினார்.

கடவுளின் கட்டளைப்படி வாழ்ந்து வந்த தாவீது செய்த மிகப்பெரிய பாவமான பாலியல் பிழை நமக்குத் தரப்பட்டிருக்கும் மாபெரும் எச்சரிக்கை.

தாவீது தனது கண்களை பாவத்தில் விழ அனுமதித்தான்.
பாவம் செய்தபின்னும் அது பாவம் என உணராதிருந்தான்.
பாவத்தைத் தொடர மேலும் கொடிய பாவங்களைச் செய்தான்.
வெளிப்பார்வைக்கு நல்லவை செய்து இதயத்தை அழுக்கடைய வைத்தான்.
போரில் தலைமை தாங்கும் தனது கடமையை மறந்து சிற்றின்பத்தில் சிக்கினான்..
“பாவம் பற்றிய உணர்வை மனிதர் இழந்திருப்பதே இக்காலத்தில் பெரிய பாவமாக இருக்கின்றது” என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். கடவுளின் பிரியத்துக்குரியவனான தாவீதின் பாவம் நமக்குத் தரப்பட்டிருக்கும் பாடம். வீழாமல் வாழ்வோம்.

Tuesday, 1 January 2019

மிகுதியான ஆசீர்வாதம்

"ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன் என்றான். அந்தப்படியே அவர்கள் செய்து, தங்கள் வலை கிழிந்து போகத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள்" (லூக். 5:6).

மனுஷன் தானாக பிரயாசப்படும்போது, முயற்சி அதிகமாக இருந்தாலும் பலன் குறைவாக இருக்கிறது. அதே நேரம், கர்த்தருடைய கரம் குறுக்கிடும்போது, முயற்சி குறைவாக இருந்தாலும் பலன் அதிகமாக விளங்கும்! அந்த தேவன் தாமே, உங்களுடைய முயற்சிகளையெல்லாம் ஆசீர்வதித்து, உயர்த்துவார். உங்கள் அப்பத்தையும், தண்ணீரையும் ஆசீர்வதிப்பார்.

கானாவூரின் கல்யாண வீட்டில் திராட்சரசம் குறைவுபட்டபோது, மனித முயற்சியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் கர்த்தருக்கு திராட்சரசத்தைக் கொண்டு வர, வெறும் தண்ணீரே போதுமானதாக இருந்தது. அந்த தேவன், தம்முடைய மகிமையான ஐசுவரியத்தின்படியே, உங்களுடைய குறைவுகளையெல்லாம் நிறைவாக்க, அவர் வல்லமையுள்ளவராக இருக்கிறார்.

இயேசுவுக்கும், அவருடைய சீஷர்களுக்கும் வரிகொடுப்பதற்கு பணம் தேவைப்பட்டது. அந்தப் பணத்தை, எங்கே போய் சம்பாதிப்பார்கள்? கர்த்தருடைய வார்த்தை குறுக்கிட்டது. முதலாவது, பிடிக்கிற மீனின் வாயில் அந்த பணம் அவர்களுக்காக காத்துக்கொண்டேயிருந்தது (மத்.17:27).

வனாந்தரத்தில், இயேசுகிறிஸ்து மூன்று நாட்கள் பிரசங்கித்த பின்பு, இயேசு சீஷர்களைப் பார்த்து: "இந்த திரளான ஜனங்களுக்கு போஜனம் கொடுங்கள்" என்றார். மனுஷ முயற்சியின்படி, அவர்கள் எங்கே போய் அப்பங்களை வாங்குவார்கள்? அதற்குத் தேவையான பணத்திற்கு என்ன செய்வார்கள்? கர்த்தருடைய கரம் குறுக்கிட்டதினால், அத்தனை பேரையும் போஷிப்பதற்கு, வெறும் ஐந்து அப்பமும், இரண்டு மீனும் போதுமானதாயிருந்தது.

மரித்துப்போன யவீருவின் மகளை, நாயீனூர் விதவையின் மகனை, லாசருவை உயிரோடு எழுப்ப, எந்த டாக்டர்களாலும் முடியவில்லை. ஆனால், கர்த்தருடைய வல்லமை குறுக்கிட்டபோதோ, கிறிஸ்துவினுடைய வாயிலிருந்து புறப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும், அவர்களை உயிர்ப்பிக்கப் போதுமானதாக இருந்தது.

தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களோடுகூட இருக்கிறார். உங்களுடைய சுய விருப்பத்தின்படி, வலையைப் போட்டால் உங்களுடைய முயற்சிதான் வீணாகுமே தவிர, ஆசீர்வாதமான மீன்களைப் பிடிக்க முடியாது. அதேநேரத்தில், கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, அவருடைய வார்த்தையின்படியே, நீங்கள் செய்ய ஒப்புக்கொடுப்பீர்களென்றால், உங்களுடைய எளிதான முயற்சியினால், பெரியதான ஆசீர்வாதத்தை சுதந்தரித்துக் கொள்வீர்கள்.

அநேகர் உணர்ச்சி வசப்பட்டு, ஊழியத்தில் இறங்கிவிடுகிறார்கள். ஆர்வமிக்க ஒரு பிரசங்கத்தைக் கேட்டுவிட்டு, மிஷனெரிகளாக புறப்பட்டு விடுகிறார்கள். பிறகு சோதனைகளும், பாடுகளும் வரும்போது, அவர்களால் நின்று பிடிக்க முடியாமல், தோல்வியடைந்தவர்களாய் தடுமாறுகிறார்கள்.

யோனா, தர்ஷீசுக்குப் போகிற கப்பலிலே ஏறினான். ஆனால் கர்த்தரோ அவனை நினிவேக்குப் போக முன் குறித்திருந்தார். தேவபிள்ளைகளே, உங்களுடைய வழியைப் பார்க்கிலும், கர்த்தருடைய வழிகள் ஆயிரம் மடங்கு மேன்மையானது. கர்த்தருடைய பாதையிலே சமாதானமும், சந்தோஷமும், ஆசீர்வாதங்களுமுண்டு.

நினைவிற்கு :- "என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்" (மத். 4:19,20).

புது வருஷத்தை நன்மையால் முடிசூட்டி // புதிய வருட சிறப்பு பாடல்

புது வருஷத்தை நன்மையால் முடிசூட்டி
முடிசூட்டி ஆசீர்வதிக்கின்றீர்
உந்தன் பாதைகள் நெய்யாய் பொழிகின்றது
பொழிகின்றது நெய்யாய் பொழிகின்றது

சீயோனில் எக்காளம் ஊதுங்கள்
ஆர்ப்பரித்து பாடுங்கள்-2-புது வருஷத்தை

ஆலயத்தின் நன்மையினால் திருப்தியாக்கி
ஆண்டு முழுதும் நடத்துகிறீர்-2
எல்லோரின் நம்பிக்கையை நம்பும் என்னையும்
அல்லும் பகலும் காத்திடுவீர் (2)-புது வருஷத்தை

வல்லமையை இடைகட்டி பலத்தினாலே
நன்மைகள் செய்திட கிருபை செய்யும்-2
ஜனங்களின் அமளியை அமரச்செய்து
நீதியுள்ள உத்தரவு அருளுகிறீர் (2)-புது வருஷத்தை

அற்புதம் அதிசயம் இந்த ஆண்டு நடக்கப்போகுது, பாடல் வரிகள்

அற்புதம் அதிசயம்
இந்த ஆண்டு நடக்கப்போகுது

கவலைப்படாதே
அற்புதங்கள் குவியப்போகுதே

சூப்பர் நேச்சுரல் ஆண்டு
இது சூப்பர் நேச்சுரல் ஆண்டு

தேவ ராஜ்ஜியம் பேச்சில் இல்ல
தேவ ராஜ்ஜியம் பெலத்தில் உள்ளதே
நிறைவேறாத வாக்குத்தத்தங்கள்
அவர் பெலத்தால் நடக்கப்போகுதே
அதை உன் கண்கள் பார்க்கப்போகுதே

இது வரைக்கும் இங்கு
தேசங்கள் கேளா
அற்புதங்கள் செஞ்சிடுமே
எங்கள் சந்ததி
தடையெல்லாம் தாண்டி
படியெல்லாம் ஓடி
ஏறு ஏறு மேலே ஏறு

தடையாய் நிற்கும் இரும்பு கதவு
தானாகவே திறக்கப்போகுது
கேள்விப்படாத ஐஸ்வர்யங்கள்
உன் கதவ தட்டப்போகுதே
உன் களஞ்சியங்கள் நிரம்பப்போகுதே

உழைப்பாளியான ரூபவதி

"செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்;…" - பிரசங்கி 9:10   செல்வமும், களியாட்டுகளும், புகழும், பெருமைய...