Thursday, 10 January 2019

ஆரோன் - Aaron

இஸ்ரயேலர்கள் எகிப்து நாட்டில் மிகக் கடுமையான அடிமைத் தனத்தில் உழன்றார்கள். அடிமைத்தனத்திலிருந்து தங்களை மீட்கவேண்டுமென அவர்கள் கடவுளை நோக்கி அபயக் குரல் கொடுத்தார்கள். ஒடுக்கப்பட்ட மக்களின் அவலக் குரலைக் கடவுள் கேட்டார். அவர்களை மீட்க முடிவு செய்து அதற்காக மோசேயைத் தேர்ந்தெடுத்தார்.

எரியும் முட்செடி வழியாக மோசேயிடம் பேசினார் கடவுள். எகிப்து நாட்டிற்குச் சென்று பார்வோன் மன்னனிடம் மக்களின் விடுதலைக்காகப் பேசவேண்டும் என்றார். மோசே தயங்கினார். தனக்குப் பேசத் தெரியாதே, திக்குமே என்று கடவுளின் அழைப்பை மறுத்தார். “உன்னோடு நானிருப்பேன்”  எனும் கடவுளின் உறுதிமொழிக்குப் பிறகும் அவருடைய தயக்கம் போகவில்லை. எனவே கடவுள் மோசேயுடன் துணையாக இன்னொரு நபரையும் அனுப்பினார்.  அவர் தான் ஆரோன்.

ஆரோன் வேறுயாருமல்ல, மோசேயின் சகோதரர் தான். நாவன்மை மிக்கவர். மன்னனின் அவையில் மோசேக்குப் பதிலாக கடவுளின் வார்த்தைகளைப் பேசுவதற்காக ஆரோன் அனுப்பப் பட்டார். அப்போது முதல் ஆரோனின் பயணம் மோசேயின் பயணத்தைச் சார்ந்தே இருந்தது. மோசே சென்ற இடங்களுக்கெல்லாம் சென்றார்.

பார்வோன் மன்னனிடம் இஸ்ரயேல் மக்களின் விடுதலைக்காகப் பேசினார். இஸ்ரயேல் மக்களிடம் போய், கடவுள் நம்மை மீட்பார் என நம்பிக்கையூட்டினார். பார்வோன் மன்னனின் மனம் கல்லாய் இருந்தது. கடவுளின் கோபம் எகிப்து நாட்டை ஆட்டிப் படைத்தபின் மன்னன் இஸ்ரேல் மக்களை விடுதலை செய்தான். அந்த விடுதலைப் பயணத்தில் மோசேயின் நிழலைப் போல சென்ற ஆரோனின் பங்கு மகத்தானது !

விடுதலை அடைந்த மக்கள் எகிப்து நாட்டை விட்டு வெளியேறியபோது அவர்களோடு கூடவே சென்றவர்களில் ஆரோன் முக்கியமானவர். பயணத்தின் வழியில் கடவுள் மோசேயிடம் “பத்து கட்டளைகளை” எழுதிக் கொடுத்த சீனாய் மலை வந்தது. அந்த மலையில் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை ஏறிச் சென்று கடவுளை நேரடியாய்ப் பார்க்கும் மாபெரும் பாக்கியம் ஆரோனுக்கு வாய்த்தது.

மோசே மலையின் மேல் ஏறிச் சென்று கடவுளோடு நாற்பது நாளும் நாற்பது பகலும் மலையிலேயே தங்கியிருந்தார். மலையடிவாரத்தில் காத்திருந்த மக்கள் பொறுமை இழந்தார்கள். அவர்கள் ஆரோனிடம் வந்து, “மோசேக்கு என்ன ஆயிற்றோ தெரியாது. நீர் எம் மக்களுக்காக ஒரு தெய்வத்தைச் செய்து கொடும்” என்றார்கள்.

ஆரோன் அவர்கள் சொன்னதற்கு உடன்பட்டார். அவர்களுடைய பொற்காதணிகளைச் சேகரித்து ஒரு பொன் கன்றுக்குட்டியைச் செய்து கொடுத்தார். மக்கள் அதையே தங்கள் தெய்வமென கொண்டாடி, ஆடிப் பாடி விருந்துண்டு கேளிக்கைகளில் மூழ்கினார்கள். அந்த இடத்தில் ஆரோன் தவறிழைக்கிறார்.

மோசே கடவுளின் கட்டளைகள் அடங்கிய கற்பலகையோடு கீழே வருகையில் நிகழ்ந்தவற்றைக் கண்டு கடும் கோபமடைந்தார். அந்த பொன் கன்றுக்குட்டியைச் சாம்பலாய் எரித்துத் தண்ணீரில் கரைத்து மக்களைக் குடிக்க வைத்தார். கடவுளின் பக்கம் இல்லாத பலர் அழிக்கப்பட்டனர். ஆரோனை பின்னர் கடவுளே முதன்மை குருவாக நியமிக்கிறார். கடைசி காலத்தில் அவரது மகனுக்கு குரு பதவியை கொடுத்து விட்டு, மலையினில் தனது மரணத்தைச் சந்திக்கிறார் ஆரோன்.

ஆரோனின் வாழ்க்கை சுவாரஸ்யங்களால் நிரம்பியிருக்கிறது. மோசே எனும் மாபெரும் தலைவரின் குரலாக பவனி வருகிறார் ஆரோன். கடவுளின் வார்த்தையை அப்படியே பின்பற்றி தனது வாழ்க்கையை மோசேயின் விடுதலைப் பயணத்தோடு முழுமையாய் இணைத்துக் கொள்கிறார்.

மோசேயுடன் இணைந்து தலைமைப் பணியை மிகச் சிறப்பாய் செய்து வந்த ஆரோன், தனியே தலைமைப் பண்பு வரும்போது தடுமாறுகிறார். தங்களுக்கென ஒரு கடவுள் வேண்டும் எனக் கேட்கும் மக்களை நல்வழிப்படுத்துவதில் தவறி விடுகிறார்.

ஆரோன் நல்லவர். அவர் கடவுளின் பணியை முழுமையாய் செயல்படுத்த தன்னை அர்ப்பணித்தவர். ஆனாலும், மக்களுடைய ஆசைகளுக்கும், விண்ணப்பங்களுக்கும் எளிதில் செவி சாய்ப்பவராக இருக்கிறார். திருமுழுக்கு யோவானைப் போல, ‘விரியன் பாம்புக் குட்டிகளே” என கடிந்து கொண்டு மக்களை வழிநடத்தும் மனப்பாங்கு ஆரோனுக்கு இல்லாமல் போனதே அவருடைய மிகப்பெரிய குறைபாடு.

இறைப்பணியில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணி கொடுக்கப்பட்டிருக்கிறது. சிலர் விரலாக இருக்கிறார்கள், சிலர் குரலாக இருக்கிறார்கள். இயேசு எனும் கொடியின் கிளைகள் போல, கிறிஸ்துவின் உடலின் உறுப்புகளாய்  இருப்பது போல, இறைப்பணியில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பணியாற்ற அழைக்கப்படுகிறோம். அந்த பணியில் அர்ப்பணிப்புடன் பயணிப்பதும், நமது பணியை விட்டு விலகாமல் இருப்பதும் நமக்கு இருக்க வேண்டிய பண்புகளாகும்.

No comments:

Post a Comment

உழைப்பாளியான ரூபவதி

"செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்;…" - பிரசங்கி 9:10   செல்வமும், களியாட்டுகளும், புகழும், பெருமைய...