Tuesday, 1 January 2019

மிகுதியான ஆசீர்வாதம்

"ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன் என்றான். அந்தப்படியே அவர்கள் செய்து, தங்கள் வலை கிழிந்து போகத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள்" (லூக். 5:6).

மனுஷன் தானாக பிரயாசப்படும்போது, முயற்சி அதிகமாக இருந்தாலும் பலன் குறைவாக இருக்கிறது. அதே நேரம், கர்த்தருடைய கரம் குறுக்கிடும்போது, முயற்சி குறைவாக இருந்தாலும் பலன் அதிகமாக விளங்கும்! அந்த தேவன் தாமே, உங்களுடைய முயற்சிகளையெல்லாம் ஆசீர்வதித்து, உயர்த்துவார். உங்கள் அப்பத்தையும், தண்ணீரையும் ஆசீர்வதிப்பார்.

கானாவூரின் கல்யாண வீட்டில் திராட்சரசம் குறைவுபட்டபோது, மனித முயற்சியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் கர்த்தருக்கு திராட்சரசத்தைக் கொண்டு வர, வெறும் தண்ணீரே போதுமானதாக இருந்தது. அந்த தேவன், தம்முடைய மகிமையான ஐசுவரியத்தின்படியே, உங்களுடைய குறைவுகளையெல்லாம் நிறைவாக்க, அவர் வல்லமையுள்ளவராக இருக்கிறார்.

இயேசுவுக்கும், அவருடைய சீஷர்களுக்கும் வரிகொடுப்பதற்கு பணம் தேவைப்பட்டது. அந்தப் பணத்தை, எங்கே போய் சம்பாதிப்பார்கள்? கர்த்தருடைய வார்த்தை குறுக்கிட்டது. முதலாவது, பிடிக்கிற மீனின் வாயில் அந்த பணம் அவர்களுக்காக காத்துக்கொண்டேயிருந்தது (மத்.17:27).

வனாந்தரத்தில், இயேசுகிறிஸ்து மூன்று நாட்கள் பிரசங்கித்த பின்பு, இயேசு சீஷர்களைப் பார்த்து: "இந்த திரளான ஜனங்களுக்கு போஜனம் கொடுங்கள்" என்றார். மனுஷ முயற்சியின்படி, அவர்கள் எங்கே போய் அப்பங்களை வாங்குவார்கள்? அதற்குத் தேவையான பணத்திற்கு என்ன செய்வார்கள்? கர்த்தருடைய கரம் குறுக்கிட்டதினால், அத்தனை பேரையும் போஷிப்பதற்கு, வெறும் ஐந்து அப்பமும், இரண்டு மீனும் போதுமானதாயிருந்தது.

மரித்துப்போன யவீருவின் மகளை, நாயீனூர் விதவையின் மகனை, லாசருவை உயிரோடு எழுப்ப, எந்த டாக்டர்களாலும் முடியவில்லை. ஆனால், கர்த்தருடைய வல்லமை குறுக்கிட்டபோதோ, கிறிஸ்துவினுடைய வாயிலிருந்து புறப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும், அவர்களை உயிர்ப்பிக்கப் போதுமானதாக இருந்தது.

தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களோடுகூட இருக்கிறார். உங்களுடைய சுய விருப்பத்தின்படி, வலையைப் போட்டால் உங்களுடைய முயற்சிதான் வீணாகுமே தவிர, ஆசீர்வாதமான மீன்களைப் பிடிக்க முடியாது. அதேநேரத்தில், கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, அவருடைய வார்த்தையின்படியே, நீங்கள் செய்ய ஒப்புக்கொடுப்பீர்களென்றால், உங்களுடைய எளிதான முயற்சியினால், பெரியதான ஆசீர்வாதத்தை சுதந்தரித்துக் கொள்வீர்கள்.

அநேகர் உணர்ச்சி வசப்பட்டு, ஊழியத்தில் இறங்கிவிடுகிறார்கள். ஆர்வமிக்க ஒரு பிரசங்கத்தைக் கேட்டுவிட்டு, மிஷனெரிகளாக புறப்பட்டு விடுகிறார்கள். பிறகு சோதனைகளும், பாடுகளும் வரும்போது, அவர்களால் நின்று பிடிக்க முடியாமல், தோல்வியடைந்தவர்களாய் தடுமாறுகிறார்கள்.

யோனா, தர்ஷீசுக்குப் போகிற கப்பலிலே ஏறினான். ஆனால் கர்த்தரோ அவனை நினிவேக்குப் போக முன் குறித்திருந்தார். தேவபிள்ளைகளே, உங்களுடைய வழியைப் பார்க்கிலும், கர்த்தருடைய வழிகள் ஆயிரம் மடங்கு மேன்மையானது. கர்த்தருடைய பாதையிலே சமாதானமும், சந்தோஷமும், ஆசீர்வாதங்களுமுண்டு.

நினைவிற்கு :- "என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்" (மத். 4:19,20).

No comments:

Post a Comment

உழைப்பாளியான ரூபவதி

"செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்;…" - பிரசங்கி 9:10   செல்வமும், களியாட்டுகளும், புகழும், பெருமைய...