Wednesday 13 February 2019

திருப்தியாக்குவார்!



"நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்" (சங். 91:16).

இன்று உலகத்தார் நீண்ட ஆயுளை விரும்பி, விதவிதமான மருந்துகளையும், மாத்திரைகளையும் உட்கொள்ளுகிறார்கள். ஆனால் கர்த்தர் ஒருவரே கிருபையாய் நீண்ட ஆயுளைக் கட்டளையிடுகிறவர். "என்னாலே உன் நாட்கள் பெருகும்; உன் ஆயுசின் வருஷங்கள் விருத்தியாகும்" (நீதி. 9:11) என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஒரு இளம் சகோதரி, தன் மூன்று சிறு சிறு குழந்தைகளை அணைத்துக்கொண்டு, நீண்டநேரம் அழுதுகொண்டேயிருந்தாள். காரணம், அவளுடைய கணவர் உடல் நிலை சரியில்லாமல், ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மரித்துப்போய்விட்டார். அவள், தன் எதிர்காலத்தை எண்ணி கலங்கிக்கொண்டிருந்தாள். குடும்பத்துக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய முடியாமல், பொறுப்புகளை நிறைவேற்ற இயலாமல் மரித்துப் போவது, எவ்வளவு வேதனையான காரியம்.

ஒருவேளை நீங்கள் இன்றைக்கு பெலவீனத்தோடு, வியாதியோடு இருக்கலாம். உங்களைப் பார்க்கிற உலகத்தார், "உன் வியாதி கொடியது, நீ நிச்சயமாய் மரித்து விடுவாய்" என்று சொல்லலாம். ஆனாலும், நம்பிக்கையை இழந்துவிடாதிருங்கள். சங்கீதக்காரனைப் போல, "நான் சாவாமல், பிழைத்திருந்து, கர்த்தருடைய செய்கைகளை விவரிப்பேன்" (சங்.118:17) என்று விசுவாச அறிக்கை செய்யுங்கள். கர்த்தர் மனமிரங்கி, அற்புதத்தைச் செய்வார்.

"இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும், இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய். உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம் பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது" (சங். 91:5-7). "பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை. கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார்" (சங். 121:7).

கர்த்தர் உங்களுடைய பெலவீனத்தை எற்றுக்கொண்டு, நோய்களையெல்லாம் சிலுவையிலே சுமந்துகொண்டார். நீங்கள் அதை மீண்டும் சுமந்துகொண்டிருக்க வேண்டியதில்லை. உங்களுடைய வியாதிகளையும், பெலவீனத்தையும் கர்த்தர் மேல் வைத்துவிடுவீர்களானால், அவருடைய தழும்புகளால் உங்களை குணமாக்குவார் (ஏசா. 53:5; 1 பேது. 2:24). நீங்கள் பயப்படுகிற எந்தக் காரியமும் உங்களுக்கு நேரிடப்போவதில்லை. கர்த்தர் உங்களுக்கு அடைக்கலமும், பெலனுமானவர். இன்றைக்கு இருக்கிற பெலவீனங்களும், நோய்களும் உங்களை விட்டு நீங்கிப்போகும். கிறிஸ்து உங்களுக்கு ஜீவனுண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தவர் அல்லவா? (யோவா. 10:10).

தேவபிள்ளைகளே, கர்த்தர், மரணத்தின் அதிபதியான பிசாசை, தன் மரணத்தினால் அழித்தவர். அவரே, மரணத்துக்கும், பாதாளத்துக்குமுரிய திறவுகோல்களை உடையவர். மரித்தும், சதா காலங்களிலும் உயிரோடிருக்கிறவர். தேவபிள்ளைகளே, இன்றைக்கு கர்த்தர் உங்களுடைய பெலவீனங்களை நீக்கிப்போட்டு, சுகபெலன் ஆரோக்கியத்தைத் தந்தருளுவார்.

நினைவிற்கு :- "உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவி கொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக; அவரே உனக்கு ஜீவனும், தீர்க்காயுசுமானவர்" (உபா. 30:20). 

No comments:

Post a Comment

உழைப்பாளியான ரூபவதி

"செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்;…" - பிரசங்கி 9:10   செல்வமும், களியாட்டுகளும், புகழும், பெருமைய...