Monday, 4 February 2019

“கொஞ்சமாயினும்!”.



கொஞ்சமாய்ச் சேர்த்தவனுக்குக் குறைவானதுமில்லை.

• (2 கொரிந்தியர் 8:14).

வாழ்க்கையில் தாங்கள் சம்பாதித்த, சேர்த்த அளவுகளையே அநேகர் கவனிக்கின்றனர். ஆனால், அவைகள் எந்த அளவிற்குத் தங்களுக்கு திருப்தியையும், நிறைவையும் அளிக்கின்றன என்பதைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை. நாம் சேர்த்ததும், அடைந்ததும் கொஞ்சமாக இருந்தாலும், அந்த கொஞ்சம் தேவனுடைய நீதியின் பாதையிலும் தேவனுக்கேற்ற வழிகளிலும் வந்ததாக இருந்தால் அது ஒரு பெரிய திருப்தியைத் தரும். நாம் சேர்த்ததும் அடைந்ததும் மிகுதியாக இருந்தாலும் அவை உத்தமும், உண்மையும் சாராத வழிகளிலும் வந்ததாக இருந்தால், அவைகளிலே பெரிய நிறைவையும், திருப்தியையும் பெற முடியாது.

நம்மிடம் இருக்கின்ற கொஞ்சத்தை கர்த்தர் ஆசீர்வதித்துத் தந்தால் போதும். அது நமக்குப் போதுமானதாகவும் மனரம்மியம் அளிப்பதாகவும் இருக்கும். அரண்மனை போன்ற வீட்டில் வாழவும், ராஜ உணவு போன்ற்ச் உணவுகளை உண்ணவும், நேரத்திற்கு நேரம் வித விதமான நாகரீக உடைகளை அணியவும் வாய்ப்பு பெற்றிருக்கிற எத்தனையோ பேருடைய வாழ்க்கை கசப்பானதாகவும், அமைதியற்றதாகவும் தொடருகிறது. சிலர், எவ்வளவோ சம்பாதித்த பின்னும், அவைகளால் திருப்தி அடைய முடியவில்லையே.

காரணம் என்ன?தேவ ஆசீர்வாதம் அவர்கள் பெற்ற மிகுந்த நன்மைகள் மேல் இல்லை. தேவ உறவை பெற்றவன் குடிசையில் வாழ நேரிட்டாலும் அற்ப உணவுகளையே உண்ணும் நிலையிலிருந்தாலும், அவைகளால் திருப்தி கண்டவனாகவும், மன அமைதி உள்ளவனாகவும் இருப்பான். இதுதானே நமக்கு வேண்டும்.

அநேகர் தேவன் தங்களுக்கு எவ்வளவு தந்திருக்கிறார் என்பதின் அடிப்படையிலேயே ஆசீர்வாதத்தைக் கணக்கிடுகின்றனர். மிகுதியாகத் தங்களுக்கு இருந்தால் தேவன் தங்களை நன்கு ஆசீர்வதித்திருக்கிறார் என்றும், கொஞ்சமாக இருந்தால் தேவன் ஏன் தங்களை அற்பமான நிலையில் வைத்திருக்கிறார் எனவும் சிந்திக்கின்றனர். இந்தப் பார்வை சரியல்ல.

அளவுகளைப் பார்க்கக்கூடாது. அவைகளை தேவன் ஆசீர்வதித்திருக்கின்றாரா என்று பார்க்க வேண்டும். ஐந்து அப்பமும், இரண்டு மீனும் ஆயிரக்கணக்கானவர்களின் பசி நேரத்தில் ஒன்றுமில்லைதான். ஆனால், அவை இயேசுவின் கரத்தில் தரப்பட்டபோது அவை அனைவருக்கும் போதுமானவைகளாக மாறியது. சாரிபாத் விதவையிடம் இருந்தது கொஞ்ச மாவுதான். ஆனாலும், தேவன் அதனை ஆசீர்வதித்தார். எனவே, பஞ்சகாலம் முழுவதும் அவளுடைய குடும்பத்தில் குறைவு ஏற்படவில்லை.

இன்றைய சிந்தனைக்கு :

எதிர்பார்ப்பதெல்லாம் கிடைக்க வேண்டும் என்ற ஏக்கத்தினால் மனிதன் மனதில் எதிர்பாராத கஷ்டங்களை எதிர்கொள்கிறான்.

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை நம் அனைவரோடும் கூட இருப்பதாக.

ஆமென் அல்லேலூயா!.

No comments:

Post a Comment

உழைப்பாளியான ரூபவதி

"செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்;…" - பிரசங்கி 9:10   செல்வமும், களியாட்டுகளும், புகழும், பெருமைய...