Thursday, 10 January 2019

மோசே

எகிப்து நாட்டில் இஸ்ரவேலர் எனும் எபிரேய குலத்தினர் நிரம்பிவிட்டார்கள். பல தலைமுறைகள் கடந்தன. இப்போது எபிரேயர்கள் எகிப்தியர்களின் நாட்டில் கடின வேலை செய்யும் அடிமை நிலைக்குத் தள்ளப்பட்டனர். எனவே அவர்கள் கடவுளை நோக்கி கண்ணீர் விட்டுக் கதறினார்கள். கடவுள் அவர்களை மீட்க முடிவெடுத்தார். அதற்காக அவர் தேர்ந்தெடுத்த நபர் தான் மோசே.

மோசே சிறுவயதில் எகிப்திய அரண்மனையில் வாழ்ந்து பின்னர் நாடு விட்டு தனியே தொலை தூரத்தில் வாழ்ந்து வந்தார். ஒருநாள் அவர் ஒரேபை மலையில் ஆடுமேய்த்துக் கொண்டிருக்கையில் திடீரென அவருக்கு முன்னால் ஒரு பச்சைச் செடி கொழுந்து விட்டு எரிந்தது. அதிலிருந்து கடவுள் அவரோடு பேசினார். அதன்படி அவரும், அவருடைய சகோதரர் ஆரோனும் எகிப்து மன்னனின் அரண்மனைக்குச் சென்றனர்.

எபிரேயர்களை விட்டு விடுங்கள். அவர்கள் தங்களுடைய கடவுளான “இருக்கிறவராய் இருக்கிறவர்” க்கு பலி செலுத்த வேண்டும். பாலை நிலத்தில் மூன்று நாட்கள் நடந்து சென்று பலியிட வேண்டும் என கடவுள் சொன்னதை அவர்கள் சொன்னார்கள். மன்னன் பார்வோன் சிரித்தான்.

மோசே தனது கையிலிருந்த கோலை கீழே போட்டார். அது பாம்பாக மாறியது. மன்னனின் வித்தைக்காரர்களும் தங்கள் கையிலிருந்த கோல்களைக் கீழே போட அவையும் பாம்பாய் மாறின. ஆனால் மோசேயின் பாம்பு மற்ற பாம்புகளை விழுங்கி விட்டன. மன்னனோ மக்களை விடவில்லை. மாறாக, மக்களுடைய வேலையை இன்னும் அதிகப்படுத்தினான்.

மறு நாள் மோசே, தனது கையிலிருந்த கோலை எடுத்து நைல் நதியை அடித்தார். நைல் நதி இரத்தமாய் மாறியது. மீன்களெல்லாம் செத்து நாற்றமெடுத்தது. மன்னனின் மந்திரக்காரர்களும் அதே வித்தையைச் செய்து காட்டினர். மன்னன் மக்களை போக விடவில்லை.

அடுத்ததாக, ஊருக்குள் தவளைகள் நிரம்பச் செய்தார் மோசே. நதியிலிருந்து வெளியேறிய தவளைகள் வீடுகளை முற்றுகையிட்டு நிறைத்தன. எகிப்திய மந்திரவாதிகளும் அப்படியே செய்ய மன்னன் இறுக்கமானான். ஆனாலும் தவளைகளின் தொந்தரவு அதிகமானதால், “சரி தவளைகளை நீக்கிவிடு, உன் மக்களைப் போக விடுகிறேன்” என்றான். மோசே கடவுளிடம் வேண்டினார். தவளைகள் அழிந்தன. மன்னனோ திருந்தவில்லை. இப்படியே ஒவ்வொரு முறையும் நடந்தது.

அடுத்ததாக தரையிலிருந்து கொசுக்கள் புற்றீசல் கிளம்பச் செய்தனர். இந்த கொசுக்களை எகிப்திய வித்தைக்காரர்களால் உருவாக்க முடியவில்லை.

அடுத்ததாக பெரிய பெரிய ஈக்கள் ஊரை நிரப்பி மக்களைத் தொந்தரவு செய்தன. ஐந்தாவதாக, எகிப்தியர்களின் கால்நடைகள் தாக்குதலுக்கு உள்ளாகின. எகிப்தியரின் எல்லா கால்நடைகளும் இறந்து போயின. இஸ்ரவேலரின் கால்நடைகள் ஒன்று கூட பாதிக்கப்படவில்லை. மக்கள் பயப்பட ஆரம்பித்தனர்.

ஆறாவதாக, ஆரோனும் மோசேயும் கொஞ்சம் சாம்பலை எடுத்து காற்றில் தூவினர். அது ஊரெங்கும் வாழ்ந்த எகிப்தியருக்கு உடலில் கொப்புளங்களை உண்டாக்கின. அவர்கள் மிகவும் துன்பப்பட்டார்கள். ஆனாலும் மன்னன் மனம் இரங்கவில்லை.

ஏழாவதாக கொடிய கல்மழை பொழியவைத்தனர். அது ஊரைக் கடுமையாய்ப் பாதித்தது. எட்டாவதாக வெட்டுக்கிளிகள் படையெடுத்தன. அவை ஊரையும், தானியங்களையும் சூறையாடின.

ஒன்பதாவதாக ஊரெங்கும் காரிருள் மூடியது. வெளிச்சம் எனும் விஷயமே இருக்கவில்லை. மூன்று நாட்கள் எகிப்தியரையும், அவர்களுடைய வீடுகளையும் இருள் மூடியது ! இஸ்ரவேலர்களை அது மூடவில்லை.

பத்தாவது வாதையில் கடவுளின் கடும் சினம் வெளிப்பட்டது. எகிப்தியரின் தலைச்சன் பிள்ளைகளெல்லாம் மடிந்து போயினர். கடவுளின் அறிவுறுத்தலின் படி வாசல்காலில் ஆட்டின் இரத்தத்தைப் பூசியிருந்த இஸ்ரவேல் மக்கள் மட்டும் அதிலிருந்து தப்பினார்கள்.

இதற்குமேல் கடவுளோடு எதிர்த்து நிற்க முடியாது என்று அறிந்த பார்வோன் மன்னன், இஸ்ரவேல் மக்களை நாட்டை விட்டு அனுப்பினான். ஆனால் கொஞ்ச நாட்களிலேயே அவனுக்கு மீண்டும் சினம் மூண்டது. இஸ்ரேயலரை திரும்ப அடிமைகளாய் அழைத்து வர முடிவெடுத்து, பெரும் படையுடன் பாலை நிலத்தில் அவர்களை விரட்டிச் சென்றான்.

இஸ்ரயேலர்கள் அப்போது செங்கடல் அருகே இருந்தார்கள். படை வருவதை அறிந்த மோசே, தனது கையிலிருந்த கோலை செங்கடல் மேல் நீட்ட கடல் தண்ணீர் இரண்டு புறமும் ஒதுங்கி வழி விட்டது. இஸ்ரவேலர்கள் அந்தப் பாதை வழியாக விரைந்து மறு கரையை அடைந்தனர்.

பின்னால் வந்த எகிப்தியப் படையும் செங்கடல் பாதையில் நுழைந்தது. ஆனால் அவர்கள் நடுவழியில் வரும்போதே மோசே மறுமுனையில் நின்று கொண்டு மீண்டும் கோலை கடலின் மீது நீட்ட,  தண்ணீர் இணைந்தது. எகிப்திய வீரர்கள் எல்லோரும் தண்ணீரில் அமிழ்ந்து இறந்து போனார்கள்.

பத்து வாதைகள், மற்றும் பத்து கட்டளைகள், இரண்டும் வேதாகமத்தின் மிக முக்கிய நிகழ்வுகளாகிவிட்டன. ஆறு இலட்சம் பேரின் விடுதலையை இறைவனால் அனுப்பப்படும் ஓரிரு நபர்களால் சாத்தியமாக்க முடியும் எனும் வியப்பூட்டும் விசுவாசப் பயணமே மோசேயின் விடுதலைப் பயணம்.

No comments:

Post a Comment

உழைப்பாளியான ரூபவதி

"செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்;…" - பிரசங்கி 9:10   செல்வமும், களியாட்டுகளும், புகழும், பெருமைய...