Thursday, 3 January 2019

ஆசீர்வதிக்கும் தேவன்!

"அவர் பெத்தானியாவரைக்கும் அவர்களை அழைத்துக்கொண்டுபோ, தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார்" (லூக். 24:50).

 தம்முடைய ஜனங்களை ஆசீர்வதிப்பதைக் குறித்து, கர்த்தர் மிகவும் அன்பும் அக்கறையுமுடையவராயிருந்தார். இன்றும் அப்படியே இருக்கிறார். அவர், இந்த பூமியை விட்டு கடந்து போவதற்கு முன்பாகச் செய்த கடைசி கிரியை, "ஆசீர்வதித்ததுதான்." "அவர் கைகளை உயர்த்தி ஆசீர்வதித்தார்."

 நீங்கள் ஆசீர்வாதமாய் இருக்க வேண்டும் என்பதில், அவருக்கு எவ்வளவு பிரியம் பாருங்கள்! அவர் ஆசீர்வதித்துக் கொண்டிருக்கும் போதுதானே, ஒரு மேகம் அவரை சூழ்ந்து கொண்டது. அவர் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் .

 ஒரு பக்தன், ஒருமுறை இவ்விதமாகச் சொன்னார்: "இயேசு உயிர்த்தெழுந்த பின்பு, சீஷர்களோடு இருக்க விரும்பி, இன்னும் நாற்பது நாட்கள் பூமியில் இருந்தார். சீஷர்களை ஆசீர்வதித்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்பது அவருடைய ஆசை."

 மேகம் தோன்றி, அவரை எடுத்துக்கொள்ளாமல் இருந்திருந்தால் அவர் பரலோகத்திற்கு போகக்கூட விரும்பாமல், தம்முடைய பிள்ளைகளை மணிக்கணக்காக, ஆசீர்வதித்துக் கொண்டே அவர்களோடேயே நின்று கொண்டிருந்திருப்பார். ஆனால், பரலோகம் அவர் பிரசன்னத்தை மிகவும் அதிகமாக விரும்பி, மேகத்தை அனுப்பி விட்டது என்றார்.

 வேதம் சொல்லுகிறது: "இஸ்ரவேலை ஆசீர்வதிப்பது, தேவனுக்கு சித்தமும் பிரியமுமாய் இருக்கிறது" அவர் நமக்கு ஜீவன் உண்டாகவும், அதை பரிபூரணப்படுத்தவும் வந்தார். அவருடைய இரட்சிப்பை, அவருடைய அபிஷேகத்தை, அவருடைய வல்லமையை, அவருடைய கிருபைகளை, ஆசீர்வாதங்களை நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றே, அவர் விரும்புகிறார்.

 பழைய ஏற்பாட்டிலே, ஆசாரிய ஊழியத்தைக் கர்த்தர் ஏற்படுத்தியபோது, ஆசாரியர்களுக்கு முக்கியமான கட்டளை ஒன்றைக் கொடுத்தார். ஆம், அவர்கள் தேவஜனங்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்பதுதான் அந்தக் கட்டளை. ஆசாரியர்கள், உடன்படிக்கைப் பெட்டியை சுமந்தால் மட்டும் போதாது. ஆசரிப்புக்கூடாரத்தில், பணிவிடை செய்தால் மட்டும் போதாது. அவர்கள், இஸ்ரவேல் ஜனங்களை ஆசீர்வதிக்க வேண்டும்!

 ஈசாக்கைப் பாருங்கள்! மரண காலம் சமீபித்தபோது, தன் பிள்ளைகளை ஆசீர்வதித்தார். யாக்கோபு தன் மரண நேரத்தில் தன் பன்னிரண்டு பிள்ளைகளையும் ஆசீர்வதித்தார். மோசே தன் இறுதி நாட்களிலே, இஸ்ரவேலரை கோத்திரம் கோத்திரமாக ஆசீர்வதித்தார். ஒவ்வொரு பரிசுத்தவான்களும், தங்களுடைய மரண நேரத்தில் தங்களுக்கு அருமையானவர்களை ஆசீர்வதித்தார்கள்.

 ஆனால், இயேசுவின் ஆசீர்வாதம் விசேஷமானது! காரணம், அவர் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்போது ஆசீர்வதித்தது மட்டுமல்ல, எப்போதும் ஜீவனுள்ளவராய், உங்கள் அருகிலேயே இருந்து, "உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்" என்று சொல்லி, தம்முடைய பிரசன்னத்தினால் ஆசீர்வதிக்கிறார் (மத். 28:20).

 இயேசு உங்களை ஆசீர்வதிக்கிறார், உங்களோடு வழிநடந்து வருகிறார், உங்கள் மேல் மனதுருகுகிறார், வியாதிகளை நீக்கி அரவணைக்கிறார். அவரைப் போல உங்களை நேசிப்பதற்கு வேறு யாருண்டு?

நினைவிற்கு:- " (இயேசு) அவர்களை (சிறு பிள்ளைகளை) அணைத்துக்கொண்டு, அவர்கள் மேல் கைகளை வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார்" (மாற்கு 10:16). 

No comments:

Post a Comment

உழைப்பாளியான ரூபவதி

"செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்;…" - பிரசங்கி 9:10   செல்வமும், களியாட்டுகளும், புகழும், பெருமைய...