Wednesday, 28 November 2018

சேர்த்து வையுங்கள்!

"கோடைக்காலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும்" (நீதி. 6:8).

எறும்பு ஞானமுள்ளதாயிருந்து, வருங்காலத்துக்காக சேமிக்கிறது. சிறிய ஜந்துதான். ஆனால், நம்முடைய கண்களுக்கு அது ஆச்சரியமாயிருக்கிறது. அதற்கு சாப்பிட வேண்டும். எறும்புக் கூட்டத்தில் வாழுகிற, அத்தனை குட்டி எறும்புகளுக்கும் சாப்பாடு கொடுக்க வேண்டும். அவற்றைப் பாதுகாக்க வேண்டும். எவ்வளவு கடமைகளிருந்தாலும், அவை வருங்காலத்துக்காக சேமிக்கின்றன.

எறும்பை, "மகா ஞானமுள்ளது" என்று சாலொமோன் ஞானி சொல்லுகிறார். "அற்பமான ஜெந்துவாயிருந்தும், கோடைக்காலத்திலே தங்கள் ஆகாரத்தைச் சம்பாதிக்கிற எறும்பும்" (நீதி. 30:25). கோடைக்காலம் வருகிறது. அதற்குப் பிறகு மழைக்காலம், குளிர்காலம் வருகிறது. அடைமழை பெய்துகொண்டிருக்கும்போது, எறும்புகளால் உணவு தேட முடிவதில்லை. சம்பாதித்து வைக்கவும் முடியாது. எறும்புகளானாலும் சரி, தேனீக்களானாலும் சரி, அவைகளுக்கு சம்பாதித்து, சேர்த்து வைக்கிற நல்ல வழக்கம் இருக்கிறது. இயேசு சொன்னார்: "பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது" (யோவா. 9:4).

கிருபையின் காலத்தில், அபிஷேக எண்ணெயை சேமித்து வைக்காமலிருந்தால், மணவாளன் வரும்போது, தீவட்டி மங்கி அல்லவா எரியும்? மணவாளனைச் சந்திக்க முடியாமற்போய்விடுமே. கர்த்தர் நோவாவிடம் பேழையைச் செய்து, அதிலே சகலவித மிருகங்களையும், பறவைகளையும் சேர்த்து வைக்கும்படி சொன்னார். "உனக்கும் அவைகளுக்கும், ஆகாரமாகச் சகலவித போஜன பதார்த்தங்களையும் சேர்த்து, உன்னிடத்தில் வைத்துக்கொள்" என்றார் (ஆதி. 6:21).

தேவபிள்ளைகளே, காலங்கள் மாறி மாறி வருகிறது. தேவையுள்ள நேரத்தில் அவைகளை பயன்படுத்தும்படி, சேர்த்து வைக்கிற பழக்கத்தைக் கையாளுங்கள். திடீரென்று விபத்துக்கள் வருகின்றன. வியாதிகள் வருகின்றன. வைத்தியச் செலவு ஏற்படுகிறது. சேமித்து வைத்திருந்தால், தாராளமாக அவைகளை எதிர்கொள்ளலாம். பிள்ளைகள், வாலிப வயதிலே கல்லூரிக்குச் சென்று படிக்கிறார்கள். பெண் பிள்ளைகளுக்கு, ஏற்ற நேரத்தில் திருமணம் ஒழுங்கு செய்யப்படுகிறது. அதற்கெல்லாம் பெரிய தொகை தேவைப்படும். அப்படிப்பட்ட நேரங்களில், உறவினர்களின் கைகளை எதிர்பார்த்திராமல், கடன் வாங்காமல், அவைகளைச் சந்திக்க திட்டமிட்டு சேர்த்து, சேமிக்க வேண்டியது, மிகவும் அவசியம்.

ஒருமுறை என் தகப்பனாரிடம் ஒருவர் வந்து, "ஐயா, என் மனைவிக்குப் பிரசவ வலி வந்து விட்டது. கையிலே பணமில்லை. கடனாக உதவி செய்யுங்கள்" என்று கேட்டார். என் தகப்பனாருக்குத் தெரியும் அவன் வீண் செலவு செய்கிற ஊதாரி என்று. அவனைப் பார்த்துச் சொன்னார், "உன் மனைவி பேறுகாலமாயிருக்கிறாள் என்று, பத்து மாதமாக உனக்குத் தெரியவில்லையா? ஏன் சேர்த்து வைக்கவில்லை" என்று கடிந்து கொண்டாலும், மனமிரங்கி அவருக்கு உதவி செய்தார்.

உங்களுடைய தேவைகளைச் சுருக்கிக் கொண்டு, எதிர்காலத்துக்காக சேர்த்து வையுங்கள். கர்த்தருடைய வருகையிலே, அவரைச் சந்திப்பதற்காக, அபிஷேகத்தைச் சேர்த்து வையுங்கள். பரலோகத்தில், உங்களுடைய கணக்கில் பொக்கிஷங்களைச் சேகரித்து வைப்பதற்காக, ஊழியங்களுக்குக் கொடுங்கள்.

நினைவிற்கு :- "அவ்வேழு வருஷங்களில் எகிப்து தேசத்தில் விளைந்த தானியங்களையெல்லாம் அவன் (யோசேப்பு) சேர்த்து, அந்தத் தானியங்களைப் பட்டணங்களில் கட்டி வைத்தான்" (ஆதி. 41:48).

No comments:

Post a Comment

உழைப்பாளியான ரூபவதி

"செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்;…" - பிரசங்கி 9:10   செல்வமும், களியாட்டுகளும், புகழும், பெருமைய...