Thursday, 29 November 2018

மேன்மைப்படுத்துவேன்!

"நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருக்கிறேன் என்பதை இஸ்ரவேலரெல்லாரும் அறியும்படிக்கு, இன்று அவர்கள் கண்களுக்கு முன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன்"
(யோசு. 3:7).

எந்த மனுஷனையும் உயர்த்தவும், எந்த மனுஷரையும் மேன்மைப்படுத்தவும், கர்த்தரால் ஆகும். அவர் எளியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, உயர்த்தி, ராஜாக்களோடு அமரப்பண்ணுகிறவர். கீர்த்தியும், புகழும், மேன்மையும், அவரிடத்திலிருந்து வருகிறது.

அதே நேரத்தில், கர்த்தர் உங்களுக்கு ஒரு வாக்குத்தத்தத்தைக் கொடுத்து, நான் உங்களோடிருக்கிறேன் என்பதை, உலகத்தார் அறிந்துகொள்ளும்படி, அவர்கள் கண்களுக்கு முன்பாக உங்களை மேன்மைப்படுத்துவேன் என்று சொல்லுகிறார். அப்படித்தான் மோசேயை, யோசுவாவை, தாவீதை கர்த்தர் மேன்மைப்படுத்தினார். உங்களை மேன்மைப்படுத்துகிறது மட்டுமல்ல, என்றென்றும் மேன்மையாக வைப்பார். வேதம் சொல்லுகிறது, "கர்த்தர் யோசுவாவைச் சகல இஸ்ரவேலரின் கண்களுக்கு முன்பாகவும் மேன்மைப்படுத்தினார். அவர்கள் மோசேக்குப் பயந்திருந்ததுபோல, அவனுக்கும், அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் பயந்திருந்தார்கள்" (யோசு. 4:14).

ஒருமுறை யுத்தக்களத்தில் யோசுவா நின்றபோது, சூரியன் அஸ்தமிக்க ஆரம்பித்துவிட்டது. இருள் சூழ்ந்துவிட்டால், எமோரியர்கள் ஜெயித்துவிடுவார்கள். "யோசுவா இஸ்ரவேலரின் கண்களுக்கு முன்பாக, சூரியனே, நீ கிபியோன்மேலும், சந்திரனே, நீ ஆயலோன் பள்ளத்தாக்கின்மேலும், தரித்துநில்லுங்கள்" (யோசு. 10:12) என்று கட்டளையிட்டார். ஒரு மனுஷனுடைய வார்த்தையைக் கேட்டு, கோடான கோடி வருஷங்களாய் ஆகாயத்திலே சுழன்று வருகிற, அக்கினிப் பிளம்பான சூரியன், அப்படியே தரித்து நின்றதென்றால், அது ஆச்சரியத்திலும் ஆச்சரியம் அல்லவா? ஆம், கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்கள் எல்லோருக்கும் முன்பாக, யோசுவாவின் வார்த்தைகளை கனப்படுத்தினார்.

யோசுவாவை கனப்படுத்தினவர், உங்களையும் கனப்படுத்தி, மேன்மைப்படுத்துவார். கீர்த்தியும், புகழ்ச்சியுமாய் வைப்பார். இன்றைக்கு இருக்கிற பிரச்சனைகள், போராட்டங்கள் முற்றிலும் மாறிப்போகும். கர்த்தர் உங்களை மேன்மைப்படுத்த நினைக்கும்போது, எந்த மனுஷனாலும் அதைத் தடுக்கவே முடியாது. நிறுத்தவும் முடியாது. "ஐசுவரியமும், கனமும், உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே, சத்துவமும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும், பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்" (1 நாளா. 29:12).

அதே நேரம், நீங்கள் செய்ய வேண்டிய ஒரு கடமையுண்டு. எப்போதும் கர்த்தருடைய நாமத்தை உயர்த்தி, அவரை மேன்மைப்படுத்துங்கள். வேத வசனங்களைக் கனப்படுத்துங்கள். கர்த்தர் செய்த அற்புதங்களை விவரித்து, சாட்சியாக மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள். அது உங்களை மேன்மைப்படுத்தும். நீங்கள் அதைத் தழுவிக்கொண்டால், அது உங்களை கனம் பண்ணும் (நீதி. 4:8).

வேதப் புத்தகத்திலிருந்து, கர்த்தர் யார் யாரை கனப்படுத்தினார். யார் யார் கர்த்தரால் மேன்மையடைந்தார்கள் என்பதையெல்லாம் விசுவாசித்து தியானித்துப்பாருங்கள். எசேக்கியா ராஜாவை கர்த்தர் கனப்படுத்தி, மேன்மைப்படுத்தினார். இன்றைக்கு கர்த்தர் உங்களை மேன்மைப்படுத்தி உயர்த்தி, மகிமைப்படுத்துவார்.

நினைவிற்கு :- "அநேகம்பேர் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவுக்கு உச்சிதங்களையும், கொண்டு வந்தார்கள். அவன் இதற்குப்பிற்பாடு சகல ஜாதிகளின் பார்வைக்கும் மேன்மைப்பட்டவனாயிருந்தான்"
(2 நாளா. 32:23).

No comments:

Post a Comment

உழைப்பாளியான ரூபவதி

"செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்;…" - பிரசங்கி 9:10   செல்வமும், களியாட்டுகளும், புகழும், பெருமைய...