Thursday, 29 November 2018

உக்கிராணக்காரன்!

"மேலும், உக்கிராணக்காரன், உண்மையுள்ளவனென்று காணப்படுவது அவனுக்கு அவசியமாம்"
(1 கொரி்ந். 4:2).

"உக்கிராணக்காரன்" என்பதற்கு, தமிழிலே "கணக்குப் பிள்ளை, மேனேஜர், கண்காணிப்பாளர்" என்றெல்லாம் பல அர்த்தங்களுண்டு. ஊழியத்திற்கு உக்கிராணக்காரருண்டு. ஆவியின் வரங்களுக்கு உக்கிராணக்காரருண்டு. அதே நேரத்தில், பொருளாதாரத்துக்கும் உக்கிராணக்காரருண்டு. உக்கிராணக்காரன், எல்லாவற்றிலும் எஜமானுக்கு கணக்கொப்புவிக்க வேண்டும். அவன் உண்மையுள்ளவனாயிருக்க வேண்டும்.

கர்த்தர், இந்த உலகத்தை சிருஷ்டித்திருக்கிறார். இந்த உலகமும், அதிலுள்ளவைகளும், உங்களுடையவைகளல்ல. கொஞ்சக் காலம் உலகத்தில் வாழும்போது, அவைகளை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். உலகத்தில் வாழும்போது, கர்த்தர் உங்களுக்கு வீட்டைத் தருகிறார். மனைவி, பிள்ளைகளைத் தருகிறார். அவர்களும் நீங்கள் கர்த்தரிடத்திலிருந்து பெற்றவைகளாகும். நீங்கள் சம்பாதிக்கிற பணம், அல்லது செல்வம் உங்களுடையவை போலத் தோன்றினாலும், உண்மையில் இது கர்த்தர் உங்களுக்குத் தந்து, உங்களை உக்கிராணக்காரராய் நியமித்திருக்கிறார். உங்கள் கையில் வருகிற பணத்தைக் குறித்து, நீங்கள் உக்கிராணக்காரனாய் கர்த்தருக்கு கணக்கொப்புவிக்க வேண்டும்.

இந்த நாட்களில், இரண்டுவிதமான பணமிருக்கிறது. கணக்கில் வராத பணத்தை "கறுப்புப் பணம்" என்று சொல்லுவார்கள். அவர்கள், அதை அரசாங்கத்துக்கு தெரியப்படுத்துவதில்லை. அதற்கு வரி கட்டுவதுமில்லை. கணக்கில் வருகிற உண்மையாய் சம்பாதித்த பணம், "வெள்ளைப் பணம்" என்று அழைக்கப்படுகிறது. இன்றைக்கு வெள்ளைப் பணத்தைப் பார்க்கிலும், "கறுப்புப் பணமே" மிக மிக அதிகம்.

அரசாங்க அதிகாரிகள், மந்திரிகள், கறுப்புப் பணத்தை கோடிக்கணக்காய் சேகரித்து வைக்கிறார்கள். பிடிபடும்போது தலைக்குனிவும், அவமானமும் அடைவார்கள். வெளிப்பார்வைக்கு பெரிய வீடு. வசதியான கார், ஆடம்பரமான வாழ்க்கையிருந்தாலும், உலகத்தை விட்டு அவர்கள் போகும்போது, ஒன்றும்கூடச் செல்வதில்லை. அவர்களுக்கு சமாதானமும், சந்தோஷமும் கிடைப்பதில்லை.

ஒரு ஊழியர் சொன்னார், "எனக்கு ஒருவர் இரண்டு கம்மல்களை காணிக்கையாகக் கொடுத்தார். விற்றுவிடலாம் என்று, மார்வாடி கடைக்குப் போனேன். அதை உரசிப் பார்த்துவிட்டு, இது உண்மையான தங்கமல்ல. கோல்டு கவரிங் என்று சொல்லி திரும்பத் தந்துவிட்டார்." உங்களுக்கு வருகிற பணம், காணிக்கையை கர்த்தர் உரசிப் பார்க்கிறார். தேவனிடத்திலிருந்து வராத எல்லாமே தீமையானது. குறுக்கு வழியில் வருவதோ, லஞ்சம் வாங்குவதோ கர்த்தருக்குப் பிரியமில்லை.

கர்த்தர், ஒருநாளும் கறுப்புப் பணத்தை கொடுப்பதில்லை. நேர்வழியாகத்தான் கொடுப்பார். முதலாவது, உங்களுக்கு அத்தியாவசியத் தேவைகளுண்டு. இரண்டாவது, நீங்கள் ஆசைப்பட்டு வாங்குகிறவைகளுண்டு. மூன்றாவது, உங்களுக்கு வேண்டு மென்ற எல்லாவற்றையும் தருவதற்கு ஆண்டவர் கிருபையுள்ளவராயிருக்கிறார். உங்களுடைய வருமானம் சிறியதாயிருந்தாலும், அதை பெருகச் செய்வார். கர்த்தரிடம் வந்த சிறுவன், அவருக்கு ஐந்து அப்பத்தையும், இரண்டு மீனையும் கொடுத்தான். கர்த்தர் அதை ஆசீர்வதித்து, ஐயாயிரம் பேருக்குப் பகிர்ந்து கொடுத்தார்.

நினைவிற்கு :- "எந்த மனுஷனும் எங்களைக் கிறிஸ்துவின் ஊழியக்காரரென்றும், தேவனுடைய இரகசியங்களின் உக்கிராணக்காரரென்றும் எண்ணிக்கொள்ளக்கடவன்"
(1 கொரிந். 4:1).

No comments:

Post a Comment

உழைப்பாளியான ரூபவதி

"செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்;…" - பிரசங்கி 9:10   செல்வமும், களியாட்டுகளும், புகழும், பெருமைய...