Friday, 30 November 2018

ஜெபக் குறிப்புகள்!

"ஜெப வேளையாகிய ஒன்பதாம்மணி நேரத்திலே, பேதுருவும், யோவானும், தேவாலயத்துக்குப் போனார்கள்" (அப். 3:1).

பாருங்கள்! பேதுருவுக்கும், யோவானுக்கும் ஜெப நேரமிருந்தது. ஜெபத்தின் இடமாக தேவாலயத்தை அவர்கள் தெரிந்துகொண்டார்கள். மாத்திரமல்ல, ஒழுங்காய் ஜெபிக்கிற வழக்கத்தையும் ஏற்படுத்திக்கொண்டார்கள். நீங்கள் ஊக்கமாக நீண்டநேரம் ஜெபிக்க வேண்டுமென்றால், ஜெபக் குறிப்புகளை வைத்துக்கொள்ளுங்கள். மட்டுமல்ல, ஒரு நல்ல ஜெப வழி முறையை உருவாக்குங்கள். அதற்கென்று ஒரு நோட்டுப் புத்தகத்தை தயாரித்துக்கொள்ளுங்கள்.

முதலாவது, கர்த்தருடைய ஊழியக்காரர்கள் பெயர்கள் என்னென்ன உங்கள் ஞாபகத்திற்கு வருகிறதோ, அத்தனையையும் எழுதி வைத்து, அவர்களுடைய பரிசுத்த ஜீவியத்திற்காகவும், பிரயாணத்திற்காகவும், ஊழியத்திற்கு திறந்த வாசல் இருக்கும்படியாகவும் ஊக்கமாக ஜெபியுங்கள். உங்கள் ஜெபம் ஊழியக்காரர்களை மட்டுமல்ல, உங்களையும்கூட பாதுகாக்கக்கூடியதாயிருக்கிறது. "யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார்" (யோபு 42:10). ஆகவே, ஊழியக்காரர்களுக்காக ஜெபித்தபிறகு, உங்கள் சிநேகிதர்கள், உறவினர்களுக்காக ஜெபியுங்கள். விசேஷமாக உங்களுடைய வாழ்க்கைத் துணை, பிள்ளைகளுக்காக போராடி, மன்றாடி ஜெபியுங்கள்.

நான் கொரியா தேசத்திற்குச் சென்றபோது, போதகர் பால் யாங்கி சோ அவர் கள், "பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே" என்ற ஜெபத்தை, ஏழு பகுதிகளாகப் பிரித்து, அதை ஒரு மணி நேரமாக, ஜெபித்து வருவதாகக் கூறினார்கள். எப்படியானாலும், ஜெபத்தின் முதல் பகுதியிலே, கர்த்தரைத் துதியுங்கள். அவருடைய நாமங்களை சொல்லித் துதியுங்கள். வேதத்தில் அவர் செய்த அற்புதங்களை தியானித்து, அவரைத் துதியுங்கள். அதற்கு உதவியாக, "ஸ்தோத்திரபலிகள் ஆயிரம்," "விசுவாச வார்த்தைகள் ஆயிரம்," "வாக்குத்தத்தங்கள் ஆயிரம்" என்ற புத்தகங்களையெல்லாம் நாங்கள் வெளியிட்டிருக்கிறோம். கர்த்தருடைய ஆவியினால் நிரம்பி, ஆவியானவரின் வழி நடத்துதலுக்கு ஒப்புக்கொடுத்து, கர்த்தர் ஏவுகிறபடி ஜெபித்துக்கொண்டிருங்கள்.

மற்றவர்கள், அநேகர் உங்களுடைய ஜெப உதவியை நாடி, எங்களுக்காக ஜெபியுங்கள். எங்கள் பிரச்சனைகளுக்காக ஜெபியுங்கள். குடும்பத்தில் ஒருமனப்பாடோ, அன்பின் ஐக்கியமோ இல்லை, "ஜெபியுங்கள்" என்று கேட்டிருக்கக்கூடும். அதையும்கூட உங்களுடைய ஜெபக் குறிப்பு நோட்டிலே, எழுதிக்கொள்ளுங்கள். அது சின்ன ஜெப நோட்டுப் புத்தகமாயிருந்தால், நீங்கள் வெளியே செல்லும் நேரத்தில், அல்லது பஸ் ஸ்டாப்பில் காத்திருக்கிற நேரத்தில், ஜெபித்துக் கொண்டேயிருக்கலாம். பிரயாணம் பண்ணுகிற நேரத்தில், அதை கையில் வைத்துக்கொண்டால் சிந்தனைகளை சிதற விடாதபடி, கருத்தூன்றி ஜெபிக்க உதவியாயிருக்கும்.

ஒவ்வொரு ஜெபக் குறிப்புக்காக ஜெபித்து வரும்போது, கர்த்தர் அதைக் கேட்டு விட்டார். நிச்சயமாய் பதில் கிடைக்கும் என்று, உங்களுடைய உள்ளம் சாட்சியிடுகிற நேரத்தில் ஜெபிப்பதற்கு அடுத்த ஜெபக் குறிப்புக்காக நீங்கள் செல்லலாம். ஜெப நேரத்தில், முதலாவது நீங்கள் தேவனைப் பார்க்கிறீர்கள். இரண்டாவது, உங்களை நீங்களே பார்க்கிறீர்கள். மூன்றாவது, மற்றவர்களைப் பார்க்கிறீர்கள். தேவனை நோக்கிப் பார்க்கும்போது, அவரைத் துதிக்க வேண்டும். அவரைப் பாடிப் போற்றி, அவருக்கு ஆராதனை செய்ய வேண்டும். மட்டுமல்ல, அவர் உங்களுக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும், அவரை துதித்துப் போற்றிப் புகழ வேண்டும்.

நினைவிற்கு :- "என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே" (சங். 103:2).

No comments:

Post a Comment

உழைப்பாளியான ரூபவதி

"செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்;…" - பிரசங்கி 9:10   செல்வமும், களியாட்டுகளும், புகழும், பெருமைய...