Wednesday, 28 November 2018

வேதப் பகுதி!

"கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள்" (சங். 119:1).

நீங்கள் ஊக்கமாய் ஜெபிக்க ஆரம்பிப்பதற்கு முன்பாக, முதலாவது, வேதத்தின் ஒரு பகுதியை வாசித்து தியானியுங்கள். வேத வசனங்கள் ஆவியாயும், ஜீவனாயுமிருக்கின்றன. அவைகளைத் தியானிக்கும்போது, உங்கள் உள்ளத்தில் பரலோக அக்கினியைக் கொண்டு வருகிறது. உங்களுடைய உள்ளத்திலே தேவ அன்பு, நேச அக்கினியாய்ப் பற்றியெரிய ஆரம்பிக்கும். பின்பு ஜெபிக்க ஆரம்பியுங்கள்.

பிரசித்திப் பெற்ற ஜார்ஜ் முல்லரோ, தேவனோடு ஆழமான உறவுகொண்டு, ஊக்கமாக ஜெபித்து, பதிலைப் பெற்றுக்கொண்டதின் இரகசியம், தனது "வேத தியானத்தின்" மூலமே அமைந்தது என்கிறார். "அன்றன்றுள்ள அப்பம்," "கன்மலை நீரோடைகள்," "தினம் தினம் தேவ வல்லமை," "ஒவ்வொரு நாளும் கிறிஸ்துவுடனேகூட," என்ற தியானப் புத்தகங்களையும் வாங்கி வாசியுங்கள். இவைகள், விமான இயந்திரத்தை உயர, உயரக் கிளம்பப் பண்ணுவதைப் போன்றதாகும். அதன் பின்பு, நீங்கள் கிறிஸ்துவோடு உன்னதங்களிலே உலாவுவதற்கும், கழுகைப்போல எழும்பிப் பறப்பதற்கும், உதவியாயிருக்கும்.

வேதத்தை திறக்கும்போதே, மிகவும் எதிர்பார்ப்போடு திறவுங்கள். "ஆண்டவரே, உம்முடைய வேதத்தின் இரகசியங்களை அறிந்துகொள்ளும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும். வேத வசனங்களின் மூலமாய் என்னோடு பேசும்" என்று ஜெபியுங்கள். வேத வசனங்கள், உங்களை கர்த்தரோடு நெருங்கிக் கிட்டிச் சேர்க்கும். வேத வாக்கியம் உங்களுக்கு மனமகிழ்ச்சியாக, கர்த்தருடைய குரலை நீங்கள் கேட்கிறதாக இருக்கட்டும். அதிலே வாக்குத்தத்தமிருந்தால், உறுதியாய்ப் பெற்று கர்த்தரிடத்திலே உரிமை பாராட்டிக் கேளுங்கள். எச்சரிப்பின் சத்தமாயிருந்தால், அதற்கு செவிசாயுங்கள். அது கட்டளையாக இருந்தால், கீழ்ப்படியுங்கள்.

வேதமானது, ஒரு "பூங்கா" போன்றதாகும். அதன் வழியாக வேகமாக கடந்து சென்றுவிடாதிருங்கள். அந்தப் பூங்காவில் கர்த்தரோடும், ஆவியானவரோடும் அமர்ந்து, சுற்றி என்ன இருக்கின்றன என்பதையும், சில குறும்பு அணில்கள், ஆங்காங்கே மென்மையாய் ஓடுவதையும் கவனியுங்கள். பறவைகள், ஆனந்தமாய்ப் பாடுவதையும், இனிமையாய் செட்டைகளை அடித்துப் பறப்பதையும் ரசியுங்கள். வேதத்தை வாசித்து தியானித்துவிட்டு, அதற்குப் பிறகு, ஜெபிக்க ஆரம்பிப்பீர்களென்றால், அது தேவ ஐக்கியத்திற்குள்ளே உங்களை இனிமையாய் வழி நடத்தும்.

அநேகருடைய உள்ளம், லௌகீகக் கவலைகளினாலும், பிரச்சனைகளினாலும் நிரம்பியிருப்பதினால், நீண்ட நேரம் அவர்களால் ஜெபிக்க முடிவதில்லை. பல பரிசுத்தவான்கள், கர்த்தருடைய சமுகத்துக்குச் செல்லுவதற்கு முன்பாக, சில எளிதான உடற்பயிற்சிகளைச் செய்து, சரீரத்தையும்கூட தேவ சமுகத்துக்கு ஆயத்தப்படுத்துகிறார்கள். கர்த்தருடைய சமுகத்துக்குச் செல்லும்போதெல்லாம் நீங்கள் கர்த்தரோடு பேசவும், கர்த்தர் பேசுகிறதைக் கவனிக்கவும், உள்ளம் திறந்திருக்கட்டும்.

மான்கள் நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, உங்கள் மனமானது கல்வாரி நாதரை வாஞ்சித்துக் கதறட்டும். தகப்பனுடைய மார்பில் குழந்தை முகம் புதைத்துக்கொண்டு, மனம் விட்டுப் பேசுவதைப்போல, அவரிடம் பேசுங்கள். அதற்காக மனதை ஆயத்தப்படுத்தி, பக்குவப்படுத்துங்கள். ஜெப நேரத்தில், மனம் மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது. தேவ சமுகத்தை தாகத்தோடு தேடுங்கள்.

நினைவிற்கு :- "நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்னமையும், பிரியமும் பரிபூரணமுமானசித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்" (ரோமர் 12:2).

No comments:

Post a Comment

உழைப்பாளியான ரூபவதி

"செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்;…" - பிரசங்கி 9:10   செல்வமும், களியாட்டுகளும், புகழும், பெருமைய...