Friday, 7 December 2018

யோசேப்பு Joseph



யாக்கோபுக்கு 12 மகன்கள். ‘கனவுகளுக்குப் பலன் சொல்லும் கலையில்’ வல்லவனான யோசேப்பு, அவருடைய பிரியத்துக்குரிய இளைய மகன். சகோதரர்கள் தன்னை வணங்குவார்கள் எனும் கனவைக் காண்கிறான்.  கோபமடைந்த  சகோதரர்கள் அவரை அடிமையாய் விற்று விடுகிறார்கள். எகிப்திய அரசமெய்க்காப்பாளனின் அடிமையாகிறார் இளைஞர் யோசேப்பு.

கடவுளின் அருள் யோசேப்புவோடு இருந்தது. அவர் செய்த எல்லா வேலைகளும் சிறப்புற முடிந்தன. எனவே தலைவர் யோசேப்புக்கு தனது வீட்டையும், சொத்துகள் அனைத்தையும் பராமரிக்கும் பொறுப்பை  ஒப்படைத்தார்.

இளமையான யோசேப்பு தனது தலைவனின் மனைவியின் மோகப் பார்வையில் விழுகிறார். யோசேப்போ “கடவுள் பார்வையில் இது தீயது” செய்யமாட்டேன் என ஓடினார். பலமுறை தகாத உறவுக்கு முயற்சித்தும் யோசேப்பு மசியவில்லை. கோபம் கொண்ட தலைவனின் மனைவி, பொய்யான பாலியல் புகார் கொடுத்து சிறைக்கு அனுப்பினாள்.

சிறையிலும் சிறப்புற்றார். கைதிகளைப் பராமரிக்கும் பொறுப்பு அவருக்குக் கிடைத்தது. சிறையில் எகிப்திய மன்னனுக்கு அப்பம் தயாரிப்பவனும், மது பரிமாறுபவனும் கூட அடைக்கப் பட்டிருந்தனர். ஒரு நாள் இருவரும் கனவு கண்டனர். தாம் கண்ட கனவைப் பற்றி யோசேப்பிடம் கூறினர்.

“ஒரு திராட்சைக் கொடியில் மூன்று கிளைகள் இருந்தன, நான் பழங்களைப் பறித்து பார்வோனின் கிண்ணத்தில் பிழிந்து ஊற்றினேன்.”  மது பரிமாறுபவன் தனது கனவைச் சொன்னான். “நல்ல செய்தி. மூன்று நாளில் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் பதவியில் செல்வாய். அப்போது எனக்காகப் பரிந்து பேசு! யோசேப்பு சொன்னார்.

“என் தலையில் மூன்று கூடைகளில் அப்பங்கள் இருந்தன. மன்னனுக்காய் தயாரித்தது. அவற்றைப் பறவைகள் தின்று விட்டன”. என்றான் அப்பம் தயாரிப்பவன். “நீ மூன்று நாளில் கொல்லப்படுவாய்” யோசேப்பு சொன்னார். யோசேப்பு சொன்னபடியே இருவருக்கும் நடந்தன.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் பார்வோன் மன்னன் கனவு கண்டான். நைல் நதிக்கரையில் ஏழு கொழுத்த பசுக்கள் நின்றன. நதியிலிருந்து வெளியே வந்த ஏழு மெலிந்த நலிந்த பசுக்கள் அவற்றை விழுங்கி விட்டன. மீண்டும் ஒரு கனவு. இப்போது ஒரே தாளிலிருந்து வெளிவந்த ஏழு கதிர்களை, தீய்ந்து போன ஏழு கதிர்கள் விழுங்கிவிட்டன.

கனவுக்குப் பொருள் தெரியாமல் மன்னன் கலங்கினான். மந்திரவாதிகள், ஞானிகள் எல்லோரும் அழைக்கப்பட்டனர். பொருள் சொல்வார் யாருமில்லை. சட்டென யோசேப்பின் ஞாபகம் மது பரிமாறுவோனுக்கு வந்தது. அவன் நடந்தவற்றையெல்லாம் மன்னனிடம் சொன்னான். யோசேப்பு சபைக்கு அழைக்கப்பட்டான்.

யோசேப்பு ஆரம்பித்தார்.  ஏழு கொழுத்த பசுக்களும், ஏழு நல்ல கதிர்களும் வரவிருக்கும் ஏழு வளமையான ஆண்டுகளைக் குறிக்கும். ஏழு மெலிந்த பசுக்களும், தீய்ந்து போன கதிர்களும் பஞ்சமான ஏழு ஆண்டுகளைக் குறிக்கும். இது கடவுளின் எச்சரிக்கை. நம் நாட்டில் அடுத்த ஏழு ஆண்டுகள் செழிப்பும், அதற்கு அடுத்த ஏழு ஆண்டுகள் சொல்ல முடியா பஞ்சமும் வரும். எனவே இந்த செழிப்பான ஏழு ஆண்டுகளில் தானியங்களில் ஐந்தில் ஒர் பங்கைச் சேமித்து, பஞ்சத்தை எதிர்கொள்வோம் !

யோசேப்பின் விளக்கத்திலும், யோசனையிலும் மன்னன் மகிழ்ந்தான். இனிமேல் இந்த நாட்டுக்கே நீ தான் அதிபதி. நீயே அனைத்தையும் நடத்து என தனக்கு அடுத்த இடத்தில் அவரை வைத்தார். யோசேப்பு சொன்னவையே நடந்தன. பஞ்சத்திலிருந்து தப்ப, யோசேப்பின் சகோதரர்கள் கூட அவரிடம் வந்து மண்டியிட்டு வணங்கினர் !

தன்னை விசுவாசித்து, நல் வழியில் நடக்கும் மனிதர்களை இறைவன் எப்படியெல்லாம் ஆசீர்வதிக்கிறார் என்பதற்கு யோசேப்பின் வாழ்க்கை ஒரு அழகிய உதாரணம்.

சகோதரர்கள் கோபம் கொண்டு அவரை அடிமையாக்கி விடுகிறார்கள். செல்கிறார். அரண்மனை மெய்க்காப்பாளன் வீட்டில் அடிமை வேலை. செய்கிறார். அழகும், அதிகாரமும் கொண்ட பெண்ணின் வசீகர அழைப்பு. “கடவுள் பார்வையில் தீயது” என விலகுகிறார் ! அவளுடைய பொய்ப் பழியைச் சுமந்து சிறை செல்கிறார். !  சிறையிலும் தனது பணியை முழுமையாய் செய்கிறார். கடைசியில் எகிப்திய அரசவையின் மிக உயரிய இடத்தை அடைகிறார்.

சிற்றின்ப மோகம், கோபம், பழிவாங்குதல், நியாயப்படுத்துதல், பொறுமையின்மை என இன்றைய தலைமுறை சிக்குண்டு கிடக்கும் அத்தனை விஷயங்களிலும் யோசேப்பு அமைதியாகவும், சரியாகவும் இருப்பது வியக்க வைக்கும் பாடம் ! கடின சூழல்கள் வரும்போதும் ‘இறைவனின் பார்வைக்கு நல்லது’ எனும் விஷயங்களை மட்டுமே செய்வதே கிறிஸ்தவனின் ஒரே பணி !

சோதனைகள் என்பது கடவுள் நம்மை மிக உயரமான இடத்துக்கு அழைத்துச் செல்லும் வழி என்பதே உண்மை. கெட்டவற்றின் மூலமும் நல்லதைத் தருவதே இறை அன்பு. அதை உணர்ந்து அமைதியும், பொறுமையும், இறை நம்பிக்கையும் கொண்டிருப்பதே நமக்குத் தரப்பட்டிருக்கும் அழைப்பு

No comments:

Post a Comment

உழைப்பாளியான ரூபவதி

"செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்;…" - பிரசங்கி 9:10   செல்வமும், களியாட்டுகளும், புகழும், பெருமைய...