Tuesday, 18 December 2018

தெபோராள்

இஸ்ரயேல் மக்கள் மீண்டும் பாவத்தில் விழுந்தார்கள் வீழ்ச்சியடைந்தார்கள். கானானிய மன்னன் யாயீர் என்பவனிடம் அடிமையானார்கள். அவனுக்கு  சீசரா என்னும் படைத்தலைவன் உண்டு. யாயீரிடம் மக்கள் கடுமையான அடக்குமுறைக்கு ஆளானார்கள். அவன் இருபது ஆண்டுகள் அவர்களை அடக்கி ஆண்டான்.

மக்கள் மனம் திரும்பி கடவுளை நோக்கி அபயக் குரல் எழுப்பினார்கள். கடவுள் மனமிரங்கினார். அந்த காலகட்டத்தில் இஸ்ரயேல் மக்களுக்கு நீதித் தலைவியாக தெபோராள் எனும் பெண்மணி இருந்தார்.  மக்கள் தீர்ப்பு தேவைப்படுகையில் அவரைத் தான் சென்று பார்ப்பார்கள். அவர் பாராக் எனும் நபரை ஆளனுப்பிக் கூப்பிட்டார்.

பாராக் வந்தார்.

தெபோராள் அவரிடம், “நீ போய் நப்தலி, செபுலோன் மக்களை தாபோர் மலையில் கூட்டு. அதிலிருந்து பத்தாயிரம் பேரைத் தேர்ந்தெடு. உன் மூலம் இஸ்ரயேல் மக்களுக்கு விடுதலை என கடவுள் சொல்கிறார்” என்றார்.

பாராக்கோ தயங்கினார். “நீரும் என்னோடு வந்தால் நான் போவேன்” என்றார்.. தெபோராள் நிமிர்ந்தாள். “வருகிறேன். ஆனால், இனி உனக்குப் பெருமை இருக்காது. கடவுள் சீசராவை ஒரு பெண்ணின் கையில் தான் ஒப்படைப்பார்” என்றார்.

தெபோரா எழுந்து பாராக்குடன் நடந்தார். திட்டமிட்டபடி மலையின் மேல் பத்தாயிரம் வீரர்களைக் கூட்டியாயிற்று. இப்போது சீசராவுக்குத் தகவல் சென்றது. “இதோ, பாராக் படையுடன் தாபோர் மலையில் ஏறிவிட்டான்”.

சீசரா அசரவில்லை. அவனிடம் இருந்த தொள்ளாயிரம் இரும்புத் தேர்களையும், மக்களையும் அழைத்துக் கொண்டு போர் முழக்கத்துடன் விரைந்தான்.

தெபோரா பாராக்கிடம், “செல்லும் ! இதோ வெற்றி உன் பக்கம்” என்றார். பாராக் மலையிலிருந்து இறங்கினார். அவருக்குப் பின்னால் பத்தாயிரம் பேரும் சீறிப் பாய்ந்தனர். அவர்களிடம் வெல்ல வேண்டுமெனும் வேட்கையும், கடவுளின் அருளும் இருந்தது.

படு பயங்கர போரில் சீசராவின் படை படுதோல்வியடைந்தது. மாவீரன் சீசரா உயிருக்குப் பயந்து தேரிலிருந்து இறங்கித் தப்பியோடினான். தலைதெறிக்க ஓடியவன் எபேர் என்பவரின் மனைவியான யாவேலின் கூடாரத்துக்குச் சென்றார். மன்னன் யாபீனுக்கும் எபேருக்கும் நல்ல நட்பு இருந்தது.

யாவேல் சீசராவை மரியாதையுடன் வரவேற்றாள். உள்ளே அமர வைத்து போர்வையால் மூடி தண்ணீர் கொடுத்தார். “வாசலில் போய் நில். யாராவது வந்து கேட்டால் உள்ளே யாரும் இல்லை என சொல்” என்று சொல்லி விட்டு களைப்பில் அயர்ந்து தூங்கினான் சீசரா.

அவன் தூங்கும் வரை யாவேல் அமைதியாய் இருந்தாள். அவளுடைய கண்களில் பகை மிதந்தது. ஆணி போல நீண்டிருந்த கூடார முளை ஒன்றைக் ஒரு கையில் எடுத்தாள். மறு கையில் ஒரு பெரிய சுத்தியலைப் பிடித்தாள். ஓசைப்படாமல் அவனை நெருங்கினாள். அவனுடைய நெற்றியில் கூடார முளையை வைத்து சுற்றியலால் ஓங்கியடித்தாள். ஆணி அவனுடைய நெற்றியைத் துளைத்து மறு பக்கம் தரையில் புதையும் வரை அடித்தாள். சீசரா, அங்கேயே இறந்தான்.

அப்போது சீசராவைத் தேடிக் கொண்டு பாராக் அந்த கூடார வாசலில் வந்தான். யாவேல் வெளியே வந்தாள். பாராக்கைப் பார்த்தாள்., “ வாங்க, நீங்க தேடும் ஆளைக் காட்டுகிறேன்” என்று சொல்லி பாராக்கை உள்ளே கூட்டிச் சென்றாள். பாராக் உருவிய வாளுடன் உள்ளே பாய்ந்தான். உள்ளேயோ சீசரா இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தான்.

தெபோராள் பைபிளின் மிக முக்கியமான நபர். இஸ்ரவேல் மக்களுக்கான “ஒரே பெண்” நீதிபதி இவர் தான்.

ஞானமும், விவேகமும் கூடவே தைரியமும் நிரம்பிய பெண் என்கிறது விவிலியம்.

 இவருடைய வாழ்க்கை சில சிந்தனைகளை நமக்குள் உருவாக்குகிறது.

பழைய ஏற்பாட்டில் வரும் மூன்றே மூன்று பெண் தீர்க்கத் தரிசிகளில் ஒருவர் இவர்.

 தவறுகளைத் தட்டிக் கேட்பவராகவும், பிறருக்கு உதவி செய்பவராகவும், அமைதியை விரும்புபவராகவும், இறைநம்பிக்கை உடையவராகவும் தெபோராள் இருந்தார்.

இஸ்ரவேலர்களிடையே தலைமையேற்கத் தகுதியான ஆண்கள் இல்லாமல் போனபோது, கடவுள் ஒரு பெண்மணியை தலைவியாக அமர்த்துகிறார்.

 தேவைப்படுகையில், கடவுள் தலைமைப் பதவிக்கு பெண்களையும் அமர்த்துவார் என்பதை இது உணர்த்துகிறது.

தெபோராள் கடவுளின் வார்த்தைகளை நம்பி, சற்றும் மாற்றாமல், அப்படியே மக்களிடம் சொல்லும் பெண்மணியாக இருந்தார்.

கடவுளின் வார்த்தையை நீர்த்துப் போகச் செய்யக் கூடாது என்பதை இது புரியவைக்கிறது.
பாராக் கடவுளின் வார்த்தையை விட அதிகமாய் தெபோராளின் அருகாமையை நம்பினான்.

 வார்த்தையான கடவுளை நம்பாமல், மனிதர்களை நம்புகையில் நாம் ஆன்மீக உயர் நிலையை அடைவதில்லை எனும் பாடம் அது !

அழைப்புக்குச் செவி கொடுக்காமல் தயங்குபவர்களைக் கடவுள் கௌரவிப்பதில்லை. சீசராவைக் கொல்லும் அழைப்பு பாராக்கிற்கு இருந்தது. ஆனாலும் அவர் தயங்கியதால் அந்தத் திட்டம் யாவேல் எனும் பெண் மூலமாய் நடந்தது.

No comments:

Post a Comment

உழைப்பாளியான ரூபவதி

"செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்;…" - பிரசங்கி 9:10   செல்வமும், களியாட்டுகளும், புகழும், பெருமைய...