Saturday, 29 December 2018

ஆதித்திருச்சபை விசுவாசிகள்



ஆதித்திருச்சபை விசுவாசிகள் தங்கள் காலத்திலேயே இயேசு வந்துவிடுவார் என்று நம்பி மிகுந்த எதிர்பார்ப்போடு வாழ்ந்து வந்தார்கள். அவருக்காக பாடு அனுபவித்தால் அதற்கேற்ற பலனை அடையலாம் என்ற அசையாத நம்பிக்கை உடையவர்களாக, கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட்சைபார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும் அநுபவித்தார்கள் எபிரெயர் 11:37.

முதல் நூற்றாண்டில் ரோமர்களின் ஆட்சியில் உலகின் பெரும்பகுதி இருந்தது. அவர்களுடைய ஆட்சியில் கிரேக்க மொழி எல்லா இடங்களிலும் பரவி மக்களால் பேசப்பட்டு வந்தது. ரோமப் பேரரசனான நீரோ (கி.பி. 54-68) மிகவும் மோசமானதொரு கொடுமைக்காரனாக இருந்தான். ரோம் எரிந்து கொண்டிருந்தபோது அவன் பிடில் (Fiddle) வாசித்து தன்னை மகிழ்வித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் கதையே அவன் எத்தகைய மனிதன் என்பதை விளக்குகிறது. கி.பி. 64 இல் ரோமில் பெருந்தீ ஏற்பட்டது. இதனை நீரோவே ஆரம்பித்ததாகவும் கூறப்படுகின்றது. ஆனால், இப்பழியை நீரோ கிறிஸ்தவர்கள் மேல் போட்டான். கிறிஸ்தவர்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இருக்கவில்லை. கிறிஸ்தவர்களை நீரோ இக்காலத்தில் மிகக் கொடூரமாக நடத்தியதை வரலாற்றாசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர். கிறிஸ்தவர்ளை மிருகத் தோலினால் சுற்றிக் கொடிய வனவிலங்குகள் அவர்களைக் கொன்று தின்னும்படி அவைகள் முன்னால் தூக்கி எறியும்படிச் செய்தான். தன்னுடைய தோட்டத்தில் இரவு நேர விருந்து உபச்சாரங்களின் போது கிறிஸ்தவர்களைக் கம்பத்தில் உயிரோடு கட்டி எண்ணை ஊற்றி எரித்து விளக்குக் கம்பங்களாகப் பயன்படுத்தினான் நீரோ. மிகக் கொடூரமாக கிறிஸ்தவர்களை நடத்தியவன் நீரோ.

இரண்டாம் நூற்றாண்டில் பித்தினியாவில் கவர்னராக இருந்த பிளினி என்பவர் கிறிஸ்தவர்களை எப்படி நடத்துவது என்று தெரியாமல் விழித்தார். அவர் டிராஜான் என்ற ரோமப் பேரரசனுக்கு எழுதிய கடிதமொன்றில், நான் கிறிஸ்தவர்களைப் பார்த்து மூன்று முறை நீங்கள் கிறிஸ்தவர்கள்தானா? என்று கேட்பேன். அவர்கள் மூன்று முறையும் ஆம் என்று பதில் சொன்னால் அவர்களுக்கு உடனடியாக மரண தண்டனை விதிப்பேன். விடாப்பிடியாக அசைய மறுப்பவர்களைத் தண்டிப்பது அவசியம், கிறிஸ்தவர்களில் ரோமப் பிரஜாவுரிமை கொண்டவர்களை ரோமுக்கு அனுப்பிவிடுகிறேன். கிறிஸ்துவை மறுதலிப்பவர்களை உடனடியாக விடுதலை செய்துவிடுகிறேன். ஆனால், உண்மையான கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவை ஒருபோதும் மறுதலிக்க மாட்டார்கள் என்று சொல்லப்படுகிறது என்று பிளினி எழுதியிருக்கிறார்.

இது போன்ற நிகழ்வுகள் இன்றைக்கு ஈரான், ஈராக், பாகிஸ்தான் நாட்டில் வசிக்கும் திருச்சபை விசுவாசிகளுக்கு ஏற்ப்படுவது இயேசுவின் இரண்டாம் வருகை சமீபம் என்பதை காட்டுகின்றது. இவ்வளவு பாடுகளை அனுபவித்த ஆதித் திருச்சபை மக்கள் தங்கள் விசுவாசத்தை விட்டு விலகவில்லை. அதற்கு ஒரே ஒரு காரணம் கர்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை எதிர் நோக்கி ஆவலோடு காத்திருந்தனர். கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார் எபிரெயர் 9:28. நீங்கள் இயேசுவை சந்திக்க ஆயத்தமாக இருக்க கர்த்தர் தாமே உங்களுக்கு உதவி செய்வாராக.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்

No comments:

Post a Comment

உழைப்பாளியான ரூபவதி

"செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்;…" - பிரசங்கி 9:10   செல்வமும், களியாட்டுகளும், புகழும், பெருமைய...