Saturday, 29 December 2018

கிறிஸ்துவுக்குள் புதுச்சிருஷ்டி

“இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்.”.

• (2 கொரிந்தியர் 5:17).

தேவன் மிகவும் அன்பானவர். அவர் நம்முடைய மீறுதல்களையும் பாவங்களையும் மன்னிக்கிறவர். நாம் பாவங்களை அவரிடத்தில் அறிக்கையிடும்போது, அவர் நம்மில் மனமகிழ்ந்து நம்மை அணைத்து கொள்கிறார். “அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்” (1 யோவான் 1:7). நாம் தேவனுடைய அன்பின் கிருபையில் வளர்ந்து புதிதானவர்களாய் மறுரூபமாக்கப்படுகிறோம்.

வாலிபன் ஒருவன் என் தந்தைக்கு, தன் இரத்தத்தினால் எழுதிய கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தான். அதில் அவன், “நான் ஒரு பாவி என்றும், அநேக பாவங்களைச் செய்த தன்னை அந்தப் பாவங்களே விரட்டி தற்கொலை செய்யத் தூண்டுகிறபடியால், தன்னைக் காப்பாற்றும்படியும் கெஞ்சி எழுதியிருந்தான். பாவம் தன்னையே காயப்படுத்தி, எழுத வைத்தது. அநேகர் அதைவிட்டு வெளியே வர விரும்பி தங்களையே அடித்துக்கொள்வது உண்டு. ஆனால், பாவத்திற்கு ஒரே பரிகாரம் இயேசு கிறிஸ்துவின் இரத்தமே. அவர் நம்முடைய பாவங்களை மன்னித்து, நம்மை குற்ற உணர்விலிருந்து மாற்றுகிறார்.

ஹைதராபாத் பட்டணத்தில் நடந்த கூட்டத்தின்போது ஜெபவேளையில் பரிசுத்த ஆவியானவர் ரெஜி என்ற வாலிபனுடைய பெயரைச் சொல்லி அழைத்து, பாவத்திற்கு அடிமைப்பட்டு சமாதானத்தை இழந்து தவிக்கும் அவனுடைய வாழ்க்கையைக் குறித்து வெளிப்படுத்தினார். உடனே அந்த வாலிபன் மேடைக்கு ஓடோடி வந்து, தேவனுடைய வல்லமை அவனைத் தொட்டு 12 ஆண்டுகளாக இருந்த பாவ பழக்கங்கள் மாறி, புது சிருஷ்டியாக மாறினதை அவன் சாட்சியாக கூறினான்.

பிரியமானவர்களே, நீங்கள் உங்கள் கிரியைகளினாலே அல்ல, கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள். மனுக்குலத்தின் மொத்த பாவங்களுக்காகவும் தம்முடைய இரத்தத்தை சிலுவையிலே சிந்தி இரத்த கிரயம் செலுத்தி கிருபையினாலே நம்மை இரட்சித்த தேவனைத் துதியுங்கள். இன்றைக்கு பாவ அடிமைத்தனத்திலிருக்கிறவர்கள் இரட்சிப்படையும்படி அவர்களுக்காக ஜெபியுங்கள். உங்கள் வெளிச்சம் அவர்களுக்கு முன்பாக பிரகாசிக்கட்டும். நீங்கள் இரட்சிப்பைப்பெற்று கிறிஸ்துவுக்குள் புதுசிருஷ்டியாய் வாழ்வதுபோல் மற்றவர்களும் தேவனுடைய அன்பை பெற்று, புதுசிருஷ்டியாகும்படி அவர்களை இரட்சிப்புக்குள் வழிநடத்துங்கள்.

அன்பான பரம தகப்பனே,

நீர் என்னை உம்முடைய இரட்சிப்பின் வெளிச்சத்திற்குள் அழைத்து வந்தததற்காய் உமக்கு நன்றி. என்னை புதுசிருஷ்டியாய் மாற்றி புதிய ஜீவியத்தை தந்தமைக்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். அதேவிதமாக பாவத்தில் குற்றவுணர்வினால் தங்களை தாங்களே தண்டித்துக்கொள்ளுகிற ஜனங்களுக்காக ஜெபிக்கிறேன். அந்த நிலைமையிலிருந்து அவர்களை விடுவித்து உம்முடைய அன்பை அறிந்துகொள்ளும்படி அவர்களின் கண்களைத் திறந்தருளும். இரட்சிப்பின் ஆவியை அவர்கள் பெற்றுக்கொள்ள கிருபை செய்தருளும்.

இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தில் ஜெபிக்கிறேன்,

ஆமென் அல்லேலூயா!.

No comments:

Post a Comment

உழைப்பாளியான ரூபவதி

"செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்;…" - பிரசங்கி 9:10   செல்வமும், களியாட்டுகளும், புகழும், பெருமைய...