Monday, 3 December 2018

கோடான கோடி மடங்கு!


"ரெபெக்காளை வாழ்த்தி: எங்கள் சகோதரியே, நீ கோடாகோடியாய்ப் பெருகுவாயாக. உன் சந்ததியார் தங்கள் பகைஞருடைய வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்வார்களாக என்று ஆசீர்வதித்தார்கள்" (ஆதி. 24:60).

ரெபெக்காள், முற்பிதாவாகிய ஈசாக்குக்கு மணவாட்டியாகப் போகிறாள். அந்த நேரத்தில், ரெபெக்காளை அவளுடைய குடும்பத்தினர் வாழ்த்தி, ஆசீர்வதிக்கும் போது, இரண்டு மடங்கு, ஐந்து மடங்கு, பத்து மடங்கு அல்ல, "கோடான கோடி" மடங்கு, என்று சொல்லி ஆசீர்வதிக்கிறதைப் பார்க்கிறோம்.

ஈசாக்கிலும் பெரியவரான கிறிஸ்து, நம்முடைய ஆத்தும மணவாளனாயிருக்கிறார். சபையானது, அவருடைய மணவாட்டியாயிருக்கிறது. "உங்களை கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காகத் தேவ வைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன்" (2 கொரி. 11:2) என்று அப். பவுல் எழுதுகிறார். ஆம், நானும், நீங்களும் தேவ சமுகத்தில் கறைதிரையற்ற, மாசற்ற மணவாட்டியாய் விளங்கவேண்டும். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது. அவருடைய மனைவி தன்னை ஆயத்தப்படுத்தினாள் (வெளி. 19:7-9). சுத்திகரிப்பிலும், பரிசுத்தத்திலும், ஆராதனையிலும், நீங்கள் உங்களை ஆயத்தப்படுத்தும்போது, நிச்சயமாகவே கோடான கோடி மடங்கு ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.

இதற்கும் மேலான, இன்னொரு ஆசீர்வாதமுண்டு. அதுதான் வானத்தின் பலகணிகளைத் திறந்த அளவாகும். நீங்கள் கர்த்தருக்கென்று சந்தோஷமாய், மனப்பூர்வமாய் தசம பாகங்களை, பண்டக சாலைக்குக் கொண்டு வரும்போது, நிச்சயமாகவே கர்த்தர் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும், உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கப்பண்ணுவார் (மல். 3:10).

கர்த்தர் ஆபிரகாமையும், அவருடைய சந்ததியையும், கடற்கரை மணலைப்போல பூமியின் தூளைப் போல, அதிகமதிகமாய் ஆசீர்வதித்தார். அதே நேரத்தில், ஆபிரகாமின் குமாரனாகிய கிறிஸ்துவின்மூலம், கர்த்தர் உன்னத ஆசீர்வாதங்களால் நிரப்பும்படிச் சித்தமானார். "நீ வானத்தை அண்ணாந்து பார். நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி, பின்பு அவனை நோக்கி, உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார்" (ஆதி. 15:5).

உலகப்பிரகாரமான யூதர்கள் ஞானத்தை சுதந்தரித்து விஞ்ஞானத்தில் சிறந்து விளங்குகிறார்கள். இஸ்மவேலர் அரபு தேசங்களில் பெட்ரோலை சுதந்தரித்து, பெரும் செல்வந்தர்களாய் விளங்குகிறார்கள். ஆனால் நாமோ, உன்னதங்களிலுள்ள சகல ஆசீர்வாதங்களாலும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம். ஒரு பக்கம், கர்த்தர் வானத்தின் பலகணிகளைத் திறக்கிறார். மறு பக்கம், வானத்து நட்சத்திரங்களைப்போல உங்களைப் பிரகாசிக்கப்பண்ணுவேன் என்று வாக்களிக்கிறார். உங்களுடைய ஆசீர்வாதங்கள், பூமியோடு நின்றுவிடுவதில்லை. அது நித்திய பர்வதம் வரைக்கும் எட்டுகின்றன.

தேவபிள்ளைகளே, நீங்கள் ஆசீர்வாதத்தை சுதந்தரிக்கும்படி அழைக்கப்பட்டவர்கள். ஆகவே உலகப்பிரகாரமானதை மட்டுமல்ல, மேலானவைகளை நித்தியமானவைகளை கர்த்தரிடத்தில் எதிர்பாருங்கள். உலகத்திலுள்ள அவ்வளவும் மாயையும், மறைந்துபோகிறதுமாயிருக்கிறது. "நித்திய சுதந்தரங்கள்" எவ்வளவு மேன்மையானவை. அவைகளையே நாடித் தேடுங்கள்.

நினைவிற்கு :- "ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும், என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்" (தானி. 12:3).

No comments:

Post a Comment

உழைப்பாளியான ரூபவதி

"செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்;…" - பிரசங்கி 9:10   செல்வமும், களியாட்டுகளும், புகழும், பெருமைய...