இஸ்ரயேலரின் முதல் அரசன் சவுல். அவருடைய மூத்த மகன் தான் யோனத்தான். சவுல் அரசராகி வெற்றிகரமாக தனது முதல் ஆண்டை முடித்திருந்தார். இப்போது அவர்களுடைய தொடர் பகைவரான பெலிஸ்தியர்கள் போருக்கு வந்தார்கள். அந்தப் போரில் முக்கியமான பங்கு வகித்தவர் யோனத்தான்.
தன்னுடன் ஆயிரம் வீரர்களை சேர்த்துக் கொண்டு சென்ற யோனத்தான் கெபா எனும் இடத்தில் காவலில் இருந்த பெலிஸ்தியர்களை வெட்டி வீழ்த்தினார். இஸ்ரயேல் மக்களிடையே யோனத்தானின் புகழ் பரவியது. யோனத்தான் ஒரு வீரனாக கொண்டாடப்பட்டார்.
காலங்கள் கடந்தன. சவுல் கடவுளை விட்டு விலகி நடக்கத் துவங்கினார். தாவீது எனும் வீரன் சவுலின் அரசவையில் அங்கம் வகித்தார். அவர் யாழ் மீட்டுவதிலும் வல்லவர். யோனத்தான் தாவீதை தனது உயிர் நண்பனாக்கிக் கொண்டான். தான் அணிந்திருந்த மேலங்கி, வாள், வில், கச்சை, எல்லாவற்றையும் தாவீதுக்குக் கொடுத்து தனது நட்பின் ஆழத்தைப் பிரகடனப் படுத்தினார். தாவீது, சவுலின் அரசவையில் படைத் தலைவனாகி வெற்றிகளைக் குவிக்கத் தொடங்கினார்.
தாவீது மாபெரும் வெற்றியாளனாய் மக்கள் மத்தியில் பிரபலமானார். மக்கள் “சவுல் ஆயிரம் பேரைக் கொன்றார், தாவீதோ பதினாயிரம் பேரைக் கொன்றார்” என பாராட்டிப் பாடினார்கள். அதைக் கேட்டது முதல் சவுல் தாவீதின் மீது விரோதம் வளர்க்கத் துவங்கினார். சவுல் மன அழுத்தத்தில் இருக்கும் போதெல்லாம் தாவீது தனது யாழை மீட்டி சவுலை அமைதிப்படுத்துவது வழக்கம். சவுல் இரண்டு முறை தாவீது யாழ் வாசித்துக் கொண்டிருக்கையில் ஈட்டியால் எறிந்து அவரைக் கொல்ல முயன்றார். தாவீது தப்பினார்.
தனது மகளை தாவீதுக்கு மணம் முடித்து கொடுத்து பெலிஸ்தியர்களின் எதிராய் தாவீதை உருவாக்க சவுல் நினைத்தார். அதுவும் நடக்கவில்லை. பெலிஸ்தியருக்கு எதிராய் தாவீதுக்கே வெற்றி. சவுலின் கோபம் இன்னும் இன்னும் அதிகரித்தது. தாவீதைக் கொல்ல வேண்டும் என எல்லாரிடமும் சொன்னார். அது தாவீதின் உயிர்நண்பனும் சவுலின் மகனுமாகிய யோனத்தானின் காதுகளிலும் விழுந்தது.
அவர் சவுலிடம் வந்து தாவீதுக்காய் பரிந்து பேசினார். தாவீதைக் கொல்ல வேண்டாம். அவர் என்றுமே உங்களுக்குத் தீமை செய்ய நினைத்ததில்லை. உங்களுக்கு மாபெரும் வெற்றிகளைத் தான் தேடித் தந்திருக்கிறார். தாவீதைக் கொன்று குற்றமற்ற இரத்தத்துக்கு எதிராகப் பாவம் செய்ய வேண்டாம் என்றான். சரி, “தாவீதைக் கொல்லமாட்டேன்” என்றார் சவுல்.
ஆனால் தாவீது மீண்டும் மீண்டும் வெற்றிகளும் செல்வாக்கும் பெறவே, சவுல் மீண்டும் தாவீதைக் கொல்ல முயன்றார். “நான் என்ன பாவம் செய்தேன். எதுக்கு உன் அப்பா என்னைக் கொல்லத் தேடுகிறார். “தாவீது யோனத்தானிடம் புலம்பினார். அதற்கு யோனத்தான், “கவலைப்படாதே. என் அப்பா என்னிடம் கேக்காமல் எதுவும் செய்ய மாட்டார். உனக்கு எதுவும் ஆகாது” என்றார். யோனத்தானுக்கும், தாவீதுக்கும் இருந்த நட்பின் ஆழம் நாளுக்கு நாள் அதிகரித்ததே தவிர குறையவில்லை.
ஆனால் தாவீதின் மீது சவுல் மிகுந்த கோபமாய் இருந்ததை அடுத்தடுத்த நாட்களில் அவர் அறிந்து கொண்டார். எனவே தாவீதை அவர் தப்புவித்து அனுப்பினார். பிரியும் வேளையில் இருவரும் கட்டிப் பிடித்து அழுதனர். அந்த அளவுக்கு அவர்களிடையே நட்பு மிகவும் ஆழமாக இருந்தது.
பின்னர் தாவீதைக் கொல்ல சவுல் தேடுகையில் தாவீது மறைந்து வாழ்ந்தார். அப்போதும் யோனத்தான் சென்று அவரைச் சந்தித்து, “ஆண்டவர் உன்னோடு இருப்பார். நீ வெல்வாய். இஸ்ரயேலின் அரசனாவாய். நான் உனக்கு அடுத்த இடத்தில் இருப்பேன்” என்றெல்லாம் வாழ்த்தினார்.
ஆனால் அந்த ஆனந்தம் நீண்ட நாள் நீடிக்கவில்லை. எதிரிகளான பெலிஸ்தியரின் கைகளில் சிக்கி சவுலும், அவர் மகன் யோனத்தானும் கொல்லப்பட்டனர். செய்தியைக் கேட்ட தாவீது தமது உடைகளைக் கிழித்துக் கொண்டு அழுது புலம்பினார். அவர்களுக்காக துயரம் மிகுந்த இரங்கற்பா பாடி உண்ணா நோன்பு இருந்தார்.
“சகோதரன் யோனத்தான்! உனக்காக என் உள்ளம் உடைந்து போனது! எனக்கு உவகை அளித்தவன் நீ! என் மீது அளித்த பேரன்பை என்னென்பேன்! அது மகளிரின் காதலை மிஞ்சியது அன்றோ” என கதறினார்.
ஆழமான நட்புக்கு அழகான உதாரணம் யோனத்தான் – தாவீது நட்பு. தாவீது தனது இருக்கைக்கு ஆபத்தாய் வந்து விடுவானோ என பயப்பட வேண்டிய யோனத்தான் தாவீதை அளவு கடந்து நேசிக்கிறார். தனது பட்டத்து உரிமையையே தாவீதுக்குக் கொடுப்பதன் முன்னறிவிப்பாய் அரச உடைகளை அவருக்கு அணிவிக்கிறார். தன் தந்தைக்கு எதிராய்ச் செயல்பட்டும் கூட நண்பனைக் காக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, எப்போதும் கடவுளை முன்னிறுத்தியே வாழ்கிறார்.
நட்பின் இத்தகைய நல்ல செயல்களை யோனத்தானின் வாழ்விலிருந்து கற்றுக் கொள்வோம்.
No comments:
Post a Comment