Saturday, 29 December 2018

புத்தியுள்ள மனுஷன்

'ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு. இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள  மனுஷனுக்கு ஒப்பிடுவேன். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏன்னென்றால், அது கன்மலையின்மேல்  அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின  புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து,  அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது' என்றார்.

• (மத்தேயு 7:24-27).

இத்தாலியில் உள்ள சாய்ந்த கோபுரம், அல்லது பைசா கோபுரம் நாம் அனைவரும் அறிந்ததே. அதை கட்டி முடிக்க 200 வருடங்கள் ஆனது. சுத்த பளிங்கு கற்களினால் கட்டப்பட்ட அந்த கோபுரத்தின் மூன்றாவது அடுக்கை கட்ட ஆரம்பித்தபோது, அஸ்திபாரம் உள்ளே இடம் பெயர ஆரம்பித்தது. சரியான அஸ்திபாரம் போடப்படாததால், அந்த கோபுரம் எப்போது சாய்ந்து போகுமோ தெரியாது. அந்த கோபுரம் சாய ஆரம்பித்ததற்கு காரணம் அஸ்திபாரம் சரியாக அமையாததுதான் என்று கூறப்படுகிறது. சரியான அஸ்திபாரத்தின் கட்டப்படாத வாழ்க்கையும் ஆட்டம் காணும்.


இயேசுகிறிஸ்து கூறின மேற்கண்ட உவமையில் ஒரு புத்தியுள்ள மனுஷனையும், புத்தியில்லாத மனுஷனையும் பற்றி கூறுகிறார். புத்தியுள்ள மனுஷன் தன் வீட்டை கன்மலையின் மேல் கட்டியிருந்தான். திடீரென்று புயல் வந்து மோதியது. அவனுடைய வீடு அசையவில்லை. ஏனெனில் அவனுடைய அஸ்திபாரம் கன்மலையின் மேல் இருந்தது. கர்த்தர் இந்த உவமையை கூறும்போது, மிகவும் விலாவரியாக, இரண்டு பேர்களின் வீட்டையும் ஒரே மாதிரியான புயல் வந்து மோதியதாக கூறுகிறார். புத்தியில்லாத மனிதனின் வீட்டின் மேல் மோதியபோதோ அந்த வீடு அழிந்து போனது என்று வாசிக்கிறோம்.


அந்த புயல் மூன்று வகைகளில் அந்த வீடுகளை தாக்கினது. முதலாவது, பெருமழை பெய்தது, அது வீட்டின் மேற் கூரை உறுதியானதா என்று பார்ப்பதற்காகவும், பெருங்காற்று அடித்து, அந்த வீட்டின் மேல் மோதினதென்பது, அந்த வீட்டின் சுவர்களின் உறுதியை சோதிப்பதாகவும், நீர் உயர்ந்து வந்தது என்பது, அதன் அஸ்திபாரத்தை சோதிப்பதாகவும் உள்ளது. இந்த மூன்று தாககுதல்களிலும் கன்மலையின் மேல் உள்ள வீடு நிலைத்து நின்றது.


நம்முடைய வாழ்க்கையும் கன்மலையாகிய கிறிஸ்துவின் மேல் கட்டப்பட்டிருந்தால், எந்த புயல் அடித்தாலும் அது அசையாதபடி உறுதியாய் நிலைநிற்கும். எந்த தரத்து மக்களையும், புயலாகிய சோதனையும் துன்பங்களும் வந்து தாக்கலாம். ஆனால் இயேசுகிறிஸ்துவின் மேல் தங்கள் அஸ்திபாரத்தை வைத்து, கட்டப்பட்டிருந்தால் அவர்கள் சோர்ந்து போகாமல் உறுதியாய் நிலைத்து நிற்பார்கள்.


மட்டுமல்ல, இயேசுகிறிஸ்து சொன்னார், 'நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ', அவனுடைய வீடு நிலைத்து நிற்கும் என்று கூறினார். நாம் கர்த்தர் வேதத்தில் சொன்ன வார்த்தைகளின்படி கேட்டு, அதன்படி செய்யும்போது, நம்முடைய வாழ்க்கை எந்த புயல் வந்து மோதி ஆழ்த்தினாலும், அசையாதபடி உறுதியாய் நிலைத்து நிற்கும். இயேசுகிறிஸ்து சொல்லிய வார்த்தைகளை அறிந்து கொள்வது எப்படி?  வேதத்தை வாசிப்பதினாலும், சத்தியத்தின்படி போதிக்கிற சபையில் இருந்து, சபை போதகர் வேதத்தில் இருந்து சொல்லும் வார்த்தைகளுக்கு கீழ்ப்படியும்போதும் நம்முடைய வாழ்க்கை உறுதியாய் நிலைத்து நிற்கும். ஏதோ பேருக்கு நானும் ஆலயத்திற்கு போகிறேன் என்று சொல்லி, வேத்தின்படி போதிக்காத சபைக்கு செல்வதால் பயன் எதுவுமில்லை. அது மணலின் மேல் தன் வீட்டை கட்டின புத்தியில்லாத மனுஷனைப்போல ஆகும். அப்போது புயல் வந்து அந்த வீட்டின் மேல் மோதினதுபோல, வாழ்க்கையில் துன்பமும், சோதனையும் வரும்போது, அந்த வீடு இருந்த இடம் இல்லாமல் அழிந்தது போல, இவர்களின் வாழ்வும் தடுமாறும், தங்களுக்கு சரியான வழிகாட்டி யாரும் இல்லாதபடியால், அவர்கள் வாழ்க்கை உறுதியில்லாதபடி காற்றில் அலசடிப்படும் இலையைப் போல் இருப்பார்கள். அவர்களின் துன்ப காலத்தில் கர்த்தர் மேல் விசுவாசம் வைத்திருக்கறீர்களா என்று கேட்டால், ஏதோ வைததிருக்கிறேன் என்று கூறுவார்கள். அவர்களது விசுவாசமும் நம்பிக்கையும் ஆழமாயிராதபடியால், அந்த மணலின் மேல் கட்டின வீட்டைப்போல விழுந்து போவார்கள்.


நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையின் அஸ்திபாரமும்  கன்மலையாகிய கிறிஸ்துவின் மேல் வைத்து கட்டப்பட்டதாகவும், அவர் சொல்லிய வார்த்தைகளின்படி கட்டப்பட்டதாகவும் இருக்கட்டும்;. அவர் சொல்லிய வார்த்தைகளை நாம் வேதத்திலிருந்து ஒவ்வொரு நாளும் படித்து, அதன்படி நம் வீட்டை கட்ட முயற்சிப்போமாக. மற்றபடி, வேறு வழிகளில் கட்டப்படுகிற எந்த வீடும், எந்த வாழ்க்கையும் மணலின் மேல் கட்டப்பட்ட வீட்டைப் போல சோதனை காலத்தில் விழுந்து போகிறவையாகவே இருக்கும்.


200 வருடங்களாக இருந்து பார்த்து பார்த்து கட்டின பைசா கோபுரம், அஸ்திபாரம் சரியில்லாததால், எப்போது வேண்டுமானாலும் விழலாம் என்று இருக்கும்போது, நாம் இருக்கப்போகிற கொஞ்ச நாட்களில் கர்த்தருடைய வார்த்தையின்படி நாம் நம் வாழ்க்கையை கட்டுவோம். கர்த்தர் அதில் மகிழட்டும்.

ஆமென் அல்லேலூயா!

No comments:

Post a Comment

உழைப்பாளியான ரூபவதி

"செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்;…" - பிரசங்கி 9:10   செல்வமும், களியாட்டுகளும், புகழும், பெருமைய...