Saturday, 29 December 2018

விழித்திருக்கிறவன் பாக்கியவான்

எஜமான் வரும்போது, விழித்திருக்கிறவர்களாகக் காணப்படுகிற ஊழியக்காரரே பாக்கியவான்கள்

• (லூக்கா. 12:37).

அப்பாவின் வருகைக்காகக் காத்திருந்து, தூங்கிப்போய், காலையில் விழித்து அப்பாவைக் கண்டதும், “ஏன் அப்பா என்னை எழுப்பவில்லை” என்று அடம்பிடித்து அழுகின்ற குழந்தைகளைக் கண்டிருக்கிறீர்களா? அப்பா வீட்டிற்குள் வரும்போது அவரை வரவேற்க எந்தப் பிள்ளைதான் விரும்பமாட்டான். ஆனால், அவர்கள் குழந்தைகள், தூங்கிவிடக்கூடும். நாம் குழந்தைகளல்லவே, நமது ஆண்டவர் வரும்போது தூங்கிவிழ!

இந்நாட்களில் ஒரு புதிய ஆண்டை எதிர்கொள்ள புதுப்புது ஆயத்தங்களில் நாம் ஈடுபட்டிருக்கலாம். அது மிக நல்லது. ஆனால், வரப்போகின்ற புது வருடம் இன்னொரு பன்னிரு மாதங்களில் முடிந்துவிடும். அதற்கே இத்தனை ஆயத்தங்கள் என்றால், நித்தியமாய் வாழுகின்றவரும், மீண்டும் வரப்போகின்றவருமாகிய கிறிஸ்துவை எதிர்கொள்ள நாம் எந்தளவுக்கு ஆயத்தமாயிருக்க வேண்டும்! அதையும் ஆண்டவரே கற்றுத் தந்திருக்கிறார். அரைகள் கட்டப்பட்ட தாய், அதாவது அன்று இஸ்ரவேல் அரைகளில் கச்சையைக் கட்டிக்கொண்டும் பாதரட்சையை தொடுத்தபடியும்தான் பஸ்காவை உண்டார்கள். ஏனெனில், அக் கட்டளை வந்தவுடன் அவர்கள் புறப்படவேண்டும் (யாத்.12:11) அதாவது, அரைக்கச்சை ஆயத்தத்தின் அடையாளம். அடுத்தது, விளக்குகள் எரிய வேண்டும். இதனை மத்தேயு 25:1-12 வரையான பகுதியில் இயேசு சொன்ன உவமையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம். அடுத்தது, எப்போதும் விழிப்புடன் காத்திருக்கவேண்டும். ஏனெனில் அவர் வரும் வேளையை யாரும் அறியார்கள்.

ஆண்டவருடைய வருகைக்காக மெய்யாகவே காத்திருக்கிறவன், மாயக்காரனாக இரான்; அவன் உண்மையுள்ளவனாய் இருப்பான் (லூக்கா 12:1). அவன் பயப்பட மாட்டான்; மாறாக, சாட்சி சொல்ல ஆயத்தமாயிருப்பான் (12:4-9). வீணாகக் கவலைப்படமாட்டான்; தேவனை நம்புவான் (12:22-27). பொருளாசை அற்றவனாயிருப்பான்; அவனுக்குத் தயாள சிந்தை இருக்கும் (12:33,34). சோம்பேறியாயிரான்; சுறுசுறுப்பாயிருப்பான் (12:37). இவை நம்மிடம் உண்டா?

நமது வாழ்வின் ஒரே நோக்கம் இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்வது, அவருடன் நித்திய வாழ்வில் பிரவேசிப்பது. அவர் வரும்போது அவரைபபோல நாமும் காணப்பட வேண்டுமானால், அவருடைய வார்த்தையை நினைவிற்கொண்டு, அவருடைய வருகையை அல்லது நமது மரணத்தை எதிர்கொள்ள ஆயத்தமுள்ளவர்களாய், சரீர தூக்கத்திலும் ஆத்துமா விழிப்புள்ளவர்களாக வாழ தூய ஆவியானவர்தாமே நமக்குப் பெலன் அருளுவாராக.

“ஆகையால், மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாம் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம்” (1 தெசலோனிக்கேயர். 5:6).

அதிசீக்கிரமாய் வரப்போகும் எங்கள் இயேசுவே, மனுஷகுமாரன் வரும்வேளை இன்ன நேரம் என்பதை நாங்கள் அறியாதிருக்கிறபடியால் எப்பொழுதும் விழிப்புணர்வுடன் ஆயத்தத்தோடு காணப்பட உமதருள் தாரும்.

ஆமென் அல்லேலூயா!.

No comments:

Post a Comment

உழைப்பாளியான ரூபவதி

"செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்;…" - பிரசங்கி 9:10   செல்வமும், களியாட்டுகளும், புகழும், பெருமைய...