ஆபிரகாமின் மகனான ஈசாக்கிற்கு இரண்டு மகன்கள். இளையவனான யாக்கோபுக்கு தந்தையின் வாழ்த்து கிடைத்ததால் மூத்த மகன் ஏசாவுக்கு கடும் கோபம். அவனைக் கொல்லத் திட்டமிடுகிறான். அதை அறிந்த பெற்றோர், அவனை தூரதேசத்திலிருக்கும் தாய்மாமனான லாபான் வீட்டுக்கு அனுப்புகிறார்கள். தாய்மாமன் பெண்ணைக் கல்யாணம் செய்து சந்தோசமாக இருக்கட்டும் என்பது அவர்களுடைய திட்டம்.
யாக்கோபு தாய்மானனின் ஊரை நோக்கி நீண்ட பயணம் மேற்கொண்டார். வழியில் ஒரு நாள் இரவு தூங்கும்போது ஒரு கனவு கண்டார். பூமியிலிருந்து வானத்துக்கு ஏணி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அதில் கடவுளின் தூதர் ஏறுவதும் இறங்குவதுமாய் இருந்தனர்.. ஆண்டவர் அதற்கு மேல் நின்று கொண்டு “உனக்கு எல்லா வளங்களும் கிடைக்கும். என் பாதுகாப்பும், ஆசீர்வாதமும் எப்போதும் உனக்கு உண்டு” என வாக்களித்தார்.
உற்சாகமான யாக்கோபு தாய்மானம் ஊரை அடைந்தார். நகருக்கு அருகேயிருந்த கிணற்றில் மந்தைக்குத் தண்ணி காட்ட ஒரு அழகிய இளம் பெண் வந்தாள். அவள் பெயர் ராகேல். அவள் தான் தனது தாய்மாமன் மகள் என அறிந்ததும் யாக்கோபு அவளை கட்டியணைத்து கண்ணீர் விட்டு நடந்த விஷயங்களையெல்லாம் சொன்னார். அவள் வியந்தாள். வீட்டிலிருந்த எல்லோரும் யாக்கோபை மிக அன்புடன் வரவேற்றார்கள். யாக்கோபு அங்கே தங்கினான்.
நீ என் உறவினர் தான். இருந்தாலும், உன் வேலைக்கு என்ன சம்பளம் வேண்டும் கேள். என்றார் லாபான். “ஏழு ஆண்டுகள் உங்களுக்காக வேலை செய்கிறேன். உங்கள் மகள் ராகேலை எனக்கு மணம் செய்து கொடுங்கள்” என்றார் யாக்கோபு. ராகேலுக்கு ஒரு அக்கா உண்டு. அவள் அழகில் கொஞ்சம் கம்மி. பெயர் லேயா. லாபான் சம்மதித்தார்.
ஏழு ஆண்டுகள் கழிந்தன. யாக்கோபுக்கும் ராகேலுக்கும் திருமண விருந்து நடந்தது. அன்று இரவு முதலிரவில் ராகேலுக்குப் பதில் லேயாவை அனுப்பி வைத்தார் தந்தை. யாக்கோபு அறியவில்லை. மறு நாள் காலையில் தான் அதிர்ச்சியடைந்தார்.
“மன்னித்துக் கொள். மூத்தவள் இருக்கும்போ எப்படி இளையவளுக்குக் கல்யாணம். ஒரு ஏழு நாள் கழித்து இளையவளையும் திருமணம் செய்து கொள். ஆனால் மீண்டும் ஒரு 7 வருஷம் நீ எனக்காக உழைக்க வேண்டும்” என்றார் லாபான். யாக்கோபு சம்மதித்தான். அப்படி அக்கா தங்கை இருவரையுமே மணந்தான்.
காலங்கள் கடந்தன. “இப்போது நான் என் மனைவி பிள்ளைகளுடன் விடைபெறுகிறேன்” என்றார் யாக்கோபு. அவருக்கு 11 பிள்ளைகள் இருந்தார்கள். “கூலியாக எனக்கு மந்தையிலுள்ளவற்றில் கலப்பு நிறமோ, வரியோ, புள்ளியோ உள்ள செம்மரியாடுகள், வெள்ளாடுகள் மற்றும் கறுப்பு ஆட்டுக்குட்டிகள் எனக்கான ஊதியம்” என்றார். லாபான் ஒத்துக் கொண்டார். ஆனால் அன்று இரவே அத்தகைய ஆடுகளையெல்லாம் மந்தையிலிருந்து பிரித்து தூரமாய் ஒட்டிச் சென்று விட்டார்.
யாக்கோபு தளரவில்லை. புன்னை, வாதுமை மற்றும் அர்மோன் மரத்து பச்சைக் கிளைகளை வெட்டு அவற்றின் தோலை வரி வரியாய் உரித்தோ, புள்ளி புள்ளியாய் வெட்டியோ வைத்தார். ஆடுகள் பொலியும் நேரத்தில் அவற்றுக்கு முன்னே அந்தக் கொம்புகளைப் போட்டார். வலிமையான ஆடுகள் பொலியும் போதெல்லாம் அப்படியே செய்தார். அதைப் பார்த்துப் பொலிந்த ஆடுகளெல்லாம் வரியுடைய அல்லது புள்ளிகளையுடைய குட்டிகளையே ஈன்றன !
கொஞ்ச காலத்திலேயே லாபானின் சூழ்ச்சியை முறியடித்து யாக்கோபு மிகப்பெரிய மந்தைக்குச் சொந்தக்காரர் ஆனார். அந்த மந்தை லாபானின் மந்தையை விட மிகவும் வலிமையானதாகவும் ஆனது ! யாக்கோபு பின்னர் தன் சகோதரனோடு அன்பில் இணைந்தார். கடவுள் அவரை “இஸ்ரயேல்” என பெயரிட்டார். அவரிடமிருந்தே கடவுளின் பிரியத்துக்குரிய சந்ததியான இஸ்ரேல் உருவானது !.
கடவுளின் சித்தமும், திட்டங்களும் சுவாரஸ்யமானவை. யாக்கோபு இளைஞனாய் இருந்த காலத்தில் ஏமாற்றுக் காரனான இருந்தான். கடவுள் அவனை ஒரு இனத்தின் தலைவராக்க விரும்பினார். ஆனால் அதற்கு முன் யாக்கோபு சில வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக் கொள்வது அவசியமானதாய் இருந்தது.
அதற்குத் தான் லாபான் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இளைய மகள் என நினைத்து மூத்த மகளைத் திருமணம் செய்கிறார் யாக்கோபு. பிறரை ஏமாற்றிப் பழக்கப்பட்ட யாக்கோபு ஏமாந்து போகிறார். மீண்டும் அவரது உழைப்பு இரண்டு மடங்காகிறது ! ராகேல் – லேயாள் எனும் இரு மனைவியரிடையே மன உளைச்சல்களையும் சம்பாதிக்கிறார்.
யாக்கோபு வலிமையாய் மாறுகிறான். ஆனாலும் கடவுள் அவனை பயன்படுத்தவில்லை. காரணம் அவர் தனது சொந்த முயற்சியினால் அனைத்தையும் சாதிக்க நினைக்கிறார். கடைசியில் அவர் கால் செயலிழந்து, முழுமையாய் வீழ்ச்சியடைகையில் முழுக்க முழுக்க கடவுளைச் சார்ந்த நிலைக்குத் தள்ளப்படுகிறார். அப்போது தான் அவர் இஸ்ரயேல் என அழைக்கப்படுகிறார்.
லாபான், தந்திரமாய் செய்த தவறுகளுக்கெல்லாம் விளைவுகள் கிடைக்கின்றன. தவறிழைக்கும் மனிதர்கள் கடவுளின் பார்வையிலிருந்து தப்புவதில்லை ! அதற்கு லாபான் விதிவிலக்கல்ல.
கடவுளை முழுமையாய் நம்புகையில் அவர் நமக்கு மிகச்சிறந்த வழியைக் காட்டுகிறார். நம்மை வழிநடத்தியும் செல்கிறார். அரைகுறை மனதுடனும், நிரம்பிய சுய பலத்துடனும் வாழ்க்கையை எதிர்கொள்கையில் அவர் ஓரமாய் நின்று விடுகிறார்.
பலம் பெற வேண்டுமெனில் பலவீனனாய் மாற வேண்டும் என்பதே கடவுள் சொல்லும் பாடம் !
No comments:
Post a Comment