எகிப்தில் அடிமைத் தனத்தில் இருந்த இஸ்ரயேல் மக்களை கடவுள் மோசே வாயிலாய் மீட்டுக் கொண்டு வந்தார். ஏறக்குறைய ஆறு இலட்சம் எனும் எண்ணிக்கையில் இருந்த அவர்கள் வழியில் மோவாபிய சமவெளிகளில் தங்கினார்கள். பெருங்கூட்டமான இஸ்ரயேலரைப் பார்த்து மன்னன் பாலாக் பயந்தான். இஸ்ரயேல் மக்களை விரட்டியடிக்க நினைத்தான்.
இஸ்ரயேல் மக்களைத் தோற்கடிக்க வேண்டுமெனில் கடவுளின் தூதர் ஒருவர் அவர்களைச் சபிக்க வேண்டும் என முடிவுசெய்தான். ‘பிலயாம்’ அந்தக் காலத்தில் மிகப்பெரிய இறை தூதராக இருந்தார். அவர் சபிப்பவர்கள் அழிந்தனர்,, அவர் வாழ்த்தியவர்கள் உயர்ந்தனர். எனவே மன்னன் அவரை அழைத்துவர ஆளனுப்பினான்.
பிலயாமை அழைக்க மன்னனின் ஆட்கள் வந்தனர். கடவுளோ பிலயாமைத் தடுதார். அவர் அவர்களுடன் போகவில்லை. எனவே மன்னன் அவர்களை விட மரியாதைக்குரிய வேறு சிலரை அனுப்பினான். இந்த முறை அவர் கழுதையில் ஏறி மன்னனின் ஆட்களுடன் சென்றார். போகும் வழியில் கடவுளின் தூதர் கழுதையை வழிமறித்தார். கழுதை, வழியை விட்டு விலகி வயலில் இறங்கியது. பிலயாம் கழுதையை அடித்தார்.
இரண்டாவது முறை தூதர் இருபுறமும் சுவர் கட்டப்பட்டிருந்த பாதையில் கழுதையை வழிமறித்தார். இப்போது கழுதை சுவரோடு சாய்ந்து உரசியது. பிலயாம் கழுதையை இரண்டாவது முறையாக அடித்தார். மூன்றாவது முறையாக தூதர் குறுகலான வழியில் கழுதையை வழிமறித்தார். இப்போது கழுதை வழியிலேயே படுத்துக் கொண்டது. பிலயாம் மூன்றாம் முறையாக கழுதையை அடித்தார்.
கழுதை வாய்திறந்து பேசியது ! “மூன்று முறை நீ என்னை அடிக்க நான் என்ன செய்தேன்” என்றது. பிலேயாம் சட்டென தனக்கு முன்னால் நின்ற கடவுளின் தூதனைக் கண்டார். முகங்குப்புற விழுந்தார். கடவுளே உமக்குப் பிடிக்காவிட்டால் நான் இதோ திரும்பிப் போய்விடுகிறேன், என்றார். கடவுளோ அவரிடம், “நீ போ. ஆனால் நான் சொல்வதை மட்டுமே சொல்” என அனுப்பி வைத்தார்.
பிலயாமை மன்னன் வெகு விமரிசையாய் வரவேற்றான். உமக்குத் தேவையான அனைத்தையும் தருவேன் இந்த மக்களைச் சபித்து விடும் என்றார். பிலயாமோ, “கடவுள் சொல்வதை மட்டுமே சொல்வேன்” என்றார். பின் சபிப்பதற்குப் பதிலாக இஸ்ரேல் மக்களை வாழ்த்தினார்.
மன்னன் எரிச்சலடைந்தான். இன்னொரு இடத்துக்குக் கூட்டிப் போய், இப்போது சபியும் என்றான். இரண்டாவது முறையாகவும் இஸ்ரயேல் மக்களை பிலயாம் வாழ்த்தினார். மன்னன் கோபமடைந்தான். மூன்றாவதாய் இன்னொரு இடத்துக்குக் கூட்டிப் போய், “இஸ்ரயேல் மக்களைச் சபியும்” என்றான். பிலயாமோ கடவுளின் அறிவுறுத்தல்படி மூன்றாவது முறையாகவும் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசிவழங்கினார்.
மன்னன் கடுங்கோபமடைந்தான். “நீர் வீடு நிறைய பொன்னும் வெள்ளியும் நிரப்பினாலும் கடவுளின் வார்த்தைக்கு எதிராக என்னால் பேச முடியது என்று நான் முதலிலேயே சொல்லி விட்டேனே” என்றார் பிலயாம்.
பிலயாமின் வாழ்க்கை பல இறை அனுபவங்களையும், புரிதல்களையும் நமக்குத் தருகிறது. இஸ்ரவேல் குலத்தில் இல்லாத அவன், இறைவனின் மிகப்பெரிய ஆசீர்வாதங்களுக்குச் சொந்தக்காரனாய் இருந்தான் என்பது ஊக்கமூட்டும் செய்தியாகும். “நீர் எவனுக்கு ஆசி வழங்குவீரோ அவன் ஆசிபெறுவான், நீர் எவனைச் சபிப்பீரோ அவன் சாபம் அடைவான்” என்கிறது விவிலியம்.
பிலயாமிடம் கடவுளே போ என்று சொல்கிறார். பின் வழிமறிக்கிறார். குழப்பமூட்டுவது போல இருக்கும் இந்த செய்தி இறைவனின் மென்மையான மனதைக் காட்டுகிறது. இதைச் செய்யாதே என இறைவன் தடுத்த ஒரு விஷயத்தை, மனிதர்களின் வற்புறுத்தலால் மீண்டும் கடவுளிடம் கேட்பது என்பது இறைவனின் விருப்பத்துக்கு மாறானது. எனவே தான் அனுமதி அளித்தபின் கடவுள் வழிமறிக்கிறார். மீண்டும் ஒரு முறை மனிதர்களின் வற்புறுத்தலால் பிலயாம் மனித வார்த்தைகளைப் பேசக் கூடாது என்பதை எச்சரிக்கவே அப்படிச் செய்கிறார்.
ஒரு கழுதையால் காண முடிந்த காட்சியைக் கூட காண முடியாதபடி பிலயாம் கழுதையின் மீது இருந்தார். அவருடைய கண்கள் திறக்கப்படாமல் இருந்தது ! மூன்று எச்சரிக்கைகளுக்குப் பிறகே பிலயாம் இறைவனைக் காணும் நிலைக்கு வருகிறார். காரணம் அவனுடைய கண்களில் செல்வத்தின் ஆசை மிதந்தது. இதை புதிய ஏற்பாடு நமக்குச் சொல்லித் தருகிறது ( 2 பேது 2 : 15 )
கடவுளின் பிள்ளைகளை ஒருவர் சபிக்க நினைத்தாலும், அந்த சாபத்தைக் கடவுள் வாழ்த்தாய் மாற்றிவிடுகிறார் என்பது இன்னொரு வியப்பூட்டும் உண்மை. இறை நம்பிக்கை இருந்தால் பிறர் நமக்கு என்னென்ன கெடுதல்கள் செய்கிறார்களோ, அவை எல்லாமே கடைசியில் நன்மைக்காகவே முடியும்.
பிலயாம் தவறும், சரியும் கலந்த மனிதன். அவருடைய போதனை இஸ்ரயேல் மக்களை பாவத்துக்குள் அழைத்துச் சென்றது என்கிறது பைபிள். குறைபாடுகள் உள்ள மனிதனும் இறைபணியில் இணையலாம் எனும் நம்பிக்கையையும் பிலயாமின் வாழ்க்கை நமக்குச் சொல்கிறது.
No comments:
Post a Comment