Friday, 7 December 2018

மிரியம் Miriam_Nile



யோசேப்பு காலத்தில் எபிரேயர்கள் எகிப்து தேசத்துக்குள் குடியேறத் துவங்கினார்கள். அப்போதைய எகிப்திய மன்னன் அவர்களுக்கு சகல வசதிகளும் செய்து கொடுத்து வரவேற்றான். தலைமுறைகள் கடந்தன. இப்போது எகிப்தியர்களை விட எபிரேயர்கள் எண்ணிக்கையிலும் வலிமையிலும் அதிகமானார்கள். புதிய எகிப்தியத் தலைவர்களுக்கு இது பொறுக்கவில்லை. எனவே எபிரேயர்களை அடிமைகளாக்கி, மிகக் கடுமையான வேலை கொடுத்து அழிக்க நினைத்தார்கள். அவர்களை வைத்து புதிய நகர்களைக் கட்டினார்கள். ஆனாலும் எபிரேயர்கள் தொடர்ந்து பலுகிப் பெருகினர்.

மருத்துவம் பார்க்கும் பெண்களிடம், “எபிரேயப் பெண்களுக்கு ஆண் பிள்ளை பிறந்தால் கொன்று விடுங்கள், பெண் குழந்தையெனில் வாழட்டும்” என மன்னன் ரகசியக் கட்டளையிட்டான். ஆனால் இளகிய மனம் படைத்த பெண்கள், இறையச்சத்தினால் அதைச் செய்யவில்லை. எபிரேயர்கள் தொடர்ந்து வளர்ந்தனர்.

இப்போது மன்னன் புதிய கட்டளை கொடுத்தான். இரண்டு வயதுக்குட்பட்ட ஆண் குழந்தைகள் எல்லோரையும் நைல் நதியில் எறிந்து கொன்று விடவேன்டும்.  இது பகிரங்கமாய் வந்த கட்டளையாதலால், வீரர்கள் ஆண் குழந்தைகளையெல்லாம் ஈவு இரக்கமின்றி கொல்ல ஆரம்பித்தனர். நாடே ஒப்பாரிச் சத்தத்தில் மூழ்கியது.

இந்தக் கால கட்டத்தில் எபிரேய லேவி குலத்தில் அம்ராம், யோகேபெத் தம்பதியினருக்கு ஒரு குழந்தை பிறந்தது. ஆண் குழந்தை. அந்தக் குழந்தையின் மூத்த அக்கா பெயர் மிரியம். பிறந்த குழந்தை ஆண் குழந்தையாதலால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். மூன்று மாத காலம் வீட்டுக்குள்ளேயே ஒளித்து வைத்திருந்தனர். இனிமேலும் ஒளித்து வைக்க முடியாது என தெரிந்ததும் கலங்கினார்கள். ஒரு சின்ன அழுகைச் சத்தம் கூட அவன் உயிருக்கு உலை வைத்துவிடக் கூடுமல்லவா !

கோரைப்புல்லால் ஒரு பேழை செய்து, தண்ணீர் புகாமல் இருக்க அதனுள் தார் பூசினர்.  பேழைக்கு ஒரு மூடி செய்தனர். அந்தப் பேழையில் குழந்தையை வைத்து நல் நதியில் மெதுவாக மிதக்க விட்டார்கள். மிரியம் தூரத்தில் அந்தப் பேழையைத் கவனித்துக் கொண்டே இருந்தாள்.

அப்போது நைல் நதியில் குளிப்பதற்காக எகிப்திய மன்னனின் மகள் வந்தாள். பேழை மிதந்து வருவதைக் கண்டாள். அதை எடுங்கள் என ஆணையிட்டாள். தோழி ஒருத்தி அதை எடுத்தாள். உள்ளே அழகான எபிரேயக் குழந்தை சிரித்தது.

குழந்தையைக் கண்டதும் இளவரசி மனம் நெகிழ்ந்தாள். கொல்ல வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் எகிப்தியப் பரம்பரையில் ஒரு இளகிய மனம். அப்போது மிரியம் அங்கே வந்து சேர்ந்தாள். “அரசியே.. வேண்டுமானால், குழந்தையை வளர்க்க எபிரேயச் செவிலி ஒருத்தியை அழைத்து வரவா ?” மிரியம் கேட்டாள். இளவரசி “சரி” என்றாள்.

மிரியம் மகிழ்ந்தாள். ஓடிச் சென்று தனது தாயையே கூட்டி வந்தாள். “இந்தக் குழந்தையை வளர்த்துக் கொடு, உனக்கு சம்பளம் தருகிறேன்” என்றாள் இளவரசி. அன்னை மகிழ்ச்சியுடன் ஒத்துக் கொண்டாள். தனது குழந்தை சாகாமல் தப்பித்தது மட்டுமல்லாமல், தன்னிடமே வளரவும், வளர்க்கும் செலவும் கிடைக்கவும் என பல விதங்களில் அவளுடைய மகிழ்ச்சி இருந்தது.

குழந்தையை வளர்த்தாள். வளர்ந்தபின் அவனை இளவரசியிடம் கொண்டு வந்து ஒப்படைத்தாள். இளவரசி அவனைப் பார்த்தாள். இனிமேல் நீ என் மகன். உன்னை நீரிலிருந்து எடுத்ததால், உன் பெயர் மோசே என்றாள் ! எந்த அரசவை எபிரேயக் குழந்தைகளைக் கொல்லத் தேடியதோ, அதே அரண்மனையில் இந்த எபிரேயக் குழந்தை வளர்ந்தது !

மிரியம் செய்த செயல் ஒரு இனத்தின் மீட்புக்கு பின்னாளில் உதவியது. எகிப்தில் அடிமையாய் இருந்த எபிரேயர்களை பிற்காலத்தில் “மோசே” தான் கடவுளின் அருளினால் மீட்டெடுத்தார்.

சிறுமியாய் இருந்தபோதே மிரியம் கொண்டிருந்த தைரியம் வியப்பூட்டுகிறது. தம்பியைக் காப்பாற்றுவதற்காக இளவரசியிடமே பயமில்லாமல் சென்று பேசுகிற அவரது தைரியம் அலாதியானது. அதில் அவருடைய பாசமும் வெளிப்படுகிறது !

இறைவனைப் புகந்து பாடுவதிலும், தீர்கத்தரிசனத்திலும் அவருடைய பிற்கால வாழ்க்கை நிரம்பியிருந்தது. மிரியம் பெண்களின் தலைவியாகவும், தீர்க்கத் தரிசியாகவும், இறை புகழ் பாடுபவராகவும், இதயத்தில் இறைவனைத் துதிப்பவராகவும் இருந்தார் என்கிறது பைபிள்.

இறைவன் இஸ்ரேயலர்களை எகிப்திலிருந்து மீட்டுக் கொண்டு வரும் நிகழ்வு பழைய ஏற்பாட்டின் மிக முக்கியமான பகுதி !  அந்த மாபெரும் இறைப் பணியின் துவக்கமாக மிரியம் எனும் சிறுமி செய்த சின்ன செயல் ஒரு வண்டியின் அச்சாணியைப் போல அர்த்தமுடையதாகி விடுகிறது. விவிலியம் குறிப்பிடும் முதல் பெண் தீர்க்கத் தரிசி மிரியம் தான் என்பது சிறப்புச் செய்தி !

நமது பணி சிறியதா பெரியதா என்பதல்ல முக்கியம் ! அது இறைவனின் பணியா என்பது மட்டுமே முக்கியம்

No comments:

Post a Comment

உழைப்பாளியான ரூபவதி

"செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்;…" - பிரசங்கி 9:10   செல்வமும், களியாட்டுகளும், புகழும், பெருமைய...