Sunday, 2 December 2018

பேசாதிருந்தால்!



"பேசாதிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான்; தன் உதடுகளை மூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான்" (நீதி. 17:28).

ஒரு சுவரில், ஒரு படம் மாட்டப்பட்டிருந்தது. அங்கே, தூண்டிலில் கோர்க்கப்பட்ட ஒரு புழுவை நோக்கி, வாயைத் திறந்தபடியே ஒரு மீன் சென்றுகொண்டிருக்கிறதைப் போன்ற படம் அது. "கீழே வாய் திறந்திருந்தால்..!" என்று எழுதப்பட்டிருந்தது. வாய் திறவாதிருந்தால், அதனுடைய ஜீவன் தப்புவிக்கப்படும். தேவபிள்ளைகள் கண்ணிகளைப் பார்க்கும்போது,  இருதயத்துக்கேற்ற வார்த்தைகளைப் பேசும்போது, வாயைத் திறவாதிருந்தால் ஆத்துமாவைத் தப்புவித்துக்கொள்ளலாம். மாட்டப்பட்டிருந்த அந்தப் படம், மவுனமாய் என்னோடு பேசியதை உணர்ந்தேன்.

ஆகவே தேவபிள்ளைகளே, நீங்கள் பேசும்போது கர்த்தர் அதை கவனித்துக் கேட்கிறார் என்கிற உணர்வோடு பேசுங்கள். சுருக்கமாய்ப் பேசுங்கள். தெளிவாக விளங்கிக்கொள்ளும்படி பேசுங்கள்.

சில வருடங்களுக்கு முன்பாக, இந்தியாவின் இராணுவ மந்திரியாயிருந்த கிருஷ்ண மேனன், ஐக்கிய நாட்டு சபையிலே பேசினாராம். இருபத்து நான்கு மணி நேரத்திற்கு மேலாக, அவர் பேசியிருந்தால் யார் அதைக் கேட்டுக்கொண்டிருப்பார்கள். ஐ.நா. சபை ஆதரவு, இந்தியாவுக்கு கிடைக்காமற்போனது உண்மைதான். சிலருக்கு சுருக்கமாய்ப் பேசி, திட்டமும் தெளிவுமாய் காரியத்தை உணர்த்துவது, கடினமான காரியமாயிருக்கும்.

நான் வெளிதேசத்திலே, கூட்டங்களை முடிக்கிற நேரத்தில், இந்த ஊழியர் சுருக்கமாய் ஜெபித்து, ஆசீர்வாதம் கூறுவார் என்றார்கள். ஆனால், அவரோ மைக்கைப் பிடித்தார். ஒரு நீண்ட பாட்டைப் பாடினார். ஒரு வசனத்தை எடுத்து வைத்துப் பிரசங்கம் பண்ண ஆரம்பித்துவிட்டார். நான் அருகிலிருந்தவரிடம் கேட்டேன், "இவர் என்ன ஊழியம் செய்கிறார்?" என்று. அவர் சொன்னார், "இவருடைய ஊழியமே மைக் தான். யாராவது தப்பித் தவறி, இவர் கையில் மைக்கைக் கொடுத்துவிட்டால், பிரேக்கில்லாத வண்டியைப்போல, பேசிக்கொண்டேயிருப்பார். ஜனங்கள் எழுந்து அமைதியாக வீட்டுக்குப் போய்விடுவார்கள்" என்றார்.

சுருக்கமாய் நான்கு வார்த்தைகள் பேசி, தெளிவாக ஜனங்களுக்கு உணர்த்தும்படி, ஞானத்தின் ஆவியைக் கேட்க வேண்டியது மிக மிக அவசியம். அப்பொழுது பல உப தேசங்களிலிருந்து, சட்டங்களிலிருந்து, தப்புவிக்கப்படுவோம். தேவபிள்ளைகளே,  இன்றைக்குத் தீர்மானம் செய்யுங்கள். வழ வழ என்று, வீண் வார்த்தைகளைப் பேசாதபடி, உங்களுடைய நாவை காத்துக்கொள்ளுங்கள். அப்பொழுது, காலத்தைப் பிரயோஜனப்படுத்துகிறவர்களாயிருப்பீர்கள்.

அப். யாக்கோபு, நாவை, "நெருப்புக்கு" ஒப்பிட்டுப் பேசினார். "நாவானது சிறிய அவயவமாயிருந்தும் பெருமையானவைகளைப் பேசும். சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்திவிடுகிறது. "நாவும் நெருப்புத்தான். அது அநீதி நிறைந்த உலகம்" (யாக். 3:5,6).

ஆகவே தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களுக்கு நாவை கிருபையாய்க் கொடுத்திருக்கிறார். எத்தனையோ பேர், ஊமையராய்ப் பேச முடியாமல் கஷ்டப்படும்போது, நாவைக் கொண்டு, கர்த்தரைத் துதித்து மகிழுங்கள்.

நினைவிற்கு :- "நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது" (யாக். 3:6).

No comments:

Post a Comment

உழைப்பாளியான ரூபவதி

"செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்;…" - பிரசங்கி 9:10   செல்வமும், களியாட்டுகளும், புகழும், பெருமைய...