சவுலுடன் எப்போதுமே இருந்த அப்னேர் சவுல் மன்னன் இறந்த பிறகு தன்னை வலிமையாக்கிக் கொண்டார். சவுலின் மகன்களில் ஒருவரான இஸ்போசேத்தை இஸ்ரயேலர்களுக்கு அரசனாக நியமித்தார். இஸ்ரயேலின் பன்னிரண்டு கோத்திரங்களில், யூதாவைத் தவிர மற்ற அனைவரும் இஸ்போசேத்தை தங்கள் மன்னனாக ஏற்றுக் கொண்டார்கள். யூதா மட்டும் தங்கள் அரசராக தாவீதை ஏற்றுக்கொண்டிருந்தார்கள்.
அப்னேரின் படைக்கும், யோவாபு முன்னின்று நடத்திய தாவீதின் படைக்கும் இடையே பெரும் போர் ஆரம்பமானது. அந்தப் போரில் அப்னேர் தோற்கடிக்கப்பட்டு ஓடினார். தோற்று ஓடிய அப்னேரை யோபாவுவின் இளைய சகோதரனான ஆசகேல் துரத்திக் கொண்டே போனான். அப்னேருக்கு ஆசகேலைக் கொல்ல விருப்பம் இல்லை. காரணம் அப்னேர் யோவாபுவிடம் நட்பில் இருந்தார். அதனால் அவர் ஆசகேலை எச்சரித்தார்.
“சும்மா சும்மா என்னைத் துரத்தி வராதே. உன்னைக் கொல்ல எனக்கு விருப்பமில்லை. அப்புறம் நான் எப்படி உன் அண்ணன் முகத்தில் முழிப்பது” என்று தடுத்தான். ஆனால் ஆசகேல் அப்னேரின் வார்த்தைகளைப் பொருட்படுத்தவில்லை. வேறு வழியில்லாமல் தற்காப்புக்காக அப்னேர் ஆசகேலைக் கொன்றார். யோவாபுவின் மனதில் அது ஒரு பெரும் அதிர்ச்சியை உருவாக்கி, பெரும் வன்மத்தை மனதுக்குள் விதைத்து விட்டது.
வலிமையிலும், செல்வாக்கிலும் மிகுந்தவனாக இருந்தாலும் அப்னேர் பாலியல் தவறிழைத்தான். மன்னர் சவுலின் துணைவியரில் ஒருவரான “இரிஸ்பா” வோடு தகாத உறவு வைத்திருந்தார். அதை மன்னர் இஸ்போசேத்து தட்டிக் கேட்டார். அது அப்னேருக்குக் கடும் கோபத்தை உருவாக்கியது. தான் அரசனாய் ஏற்படுத்தியவன் தன்னிடமே கேள்வி கேட்பதா எனும் ஈகோ அவனுக்குள் முளைத்தது.
“உன் அரசு போகும். ஒட்டு மொத்த இஸ்ரயேலரையும் கடவுளின் கட்டளைப்படி தாவீது ஆள்வார்.” என சீறினார். அப்னேரைப் பார்த்து மன்னனே பயந்தான்.
அப்னேர் உடனே தாவீதுக்கு ஆளனுப்பி, “ஒட்டு மொத்த இஸ்ரயேலுக்கும் உன்னை அரசனாக்க, நான் உம்மோடு இருப்பேன். சம்மதமெனில் உடன்படிக்கை செய்து கொள்ளும்” என்றார். தாவீதும் அப்படியே செய்தார். “ உன்னை என் படைகளுக்கெல்லாம் தலைவனாக்குவேன்” என்றும் வாக்கு கொடுத்தார்.
அப்னேர் உடனடியாக வேலைகளை ஆரம்பித்தார். இஸ்ரயேலின் தலைவர்களையெல்லாம் தாவீதுக்கு ஆதரவாக மாற்றத் தொடங்கினார். தாவீதை ஒட்டு மொத்த இஸ்ரயேலுக்கும் தலைவராக்கும் திட்டம் படிப்படியாய் வெற்றிப் பாதையில் நடந்து கொண்டிருந்தது.
மகிழ்ச்சியைக் கொண்டாட அப்னேர் பத்து பேரோடு தாவீதை வந்து சந்தித்தார். தாவீது அவர்களுக்கு மாபெரும் விருந்து ஒன்றைக் கொடுத்தான். “சரி, நான் போய் இனி தலைவர்களையெல்லாம் அழைத்து வருகிறேன். நீங்கள் அவர்களோடு உடன்படிக்கை செய்து, ஒட்டு மொத்த இஸ்ரயேலுக்கே அரசனாகி விடலாம்” அப்னேர் சொல்ல தாவீது மகிழ்ச்சியுடன் அவனை வழியனுப்பி வைத்தார்.
யோபாவு இதைக் கேள்விப்பட்டதும் தாவீதிடம் தனது கோபத்தைக் காட்டினார். “என்ன காரியம் செய்தீங்க. அவன் ஏமாற்றுக்காரன். இங்கே நடப்பதை அறிந்து கொள்ள வந்தவன். அவனைக் கொன்றிருக்க வேண்டும். சும்மா விட்டு விட்டீர்களே” என்றான்.
கோபத்துடன் வெளியேறிய யோபாவு தாவீதுக்குத் தெரியாமல் ரகசியமாய் தூதர்களை அனுப்பி அப்னேரை அழைத்து வரச் செய்தான். யோபாவு தாவீதின் நம்பிக்கைக்குரியவன் என்பதால் அப்னேர் அவனை நம்பினான். ஆனால் யோபாவுவின் மனதில் தன் சகோதரனைக் கொன்றவனைக் கொல்ல வேண்டும் எனும் பழி வாங்குதல் உணர்வே மேலோங்கி இருந்தது.
“வா, தனியா பேசவோம்” என அப்னேரை நயவஞ்சகமாய் அழைத்துப் போய் கொலை செய்தான் யோபாவு. அப்னேரின் சாவு தாவீதை அதிர்ச்சியடையச் செய்தது. அவர் அழுது புலம்பி துக்கம் அனுசரித்தார். “கொலைகாரர்களை நான் தண்டிக்க மாட்டேன், கடவுளே அவர்களைத் தண்டிக்கட்டும்” என்றார். அப்னேர் இறந்தாலும் அவனுடைய திட்டம் நிறைவேறியது. தாவீது இஸ்போசேத்தைக் கொன்று, ஒட்டு மொத்த இஸ்ரவேலுக்கும் மன்னனாக மாறினார்.
விவிலியத்தில் அதிகம் பேசப்படாத கதாபாத்திரமானாலும் மிக முக்கியமான பாத்திரம் அப்னேர். தாவீது இஸ்ரயேலின் மன்னனாக வேண்டும் எனும் கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் இவன் பங்கும் இருந்தது. ஆனாலும் கடவுளுடைய திட்டத்தை முழுமையாய் ஏற்றுக் கொள்ளாமல் சுயநலமாய் செயல்பட்டதும், தகாத உறவில் வீழ்ந்ததும் அவனுடைய மாபெரும் பலவீனங்களாக மாறின.
இறைவனின் திட்டம் எது எனத் தெரிந்தால் எந்த விதமான சுய நலச் சிந்தனைகளுக்கும் இடம் கொடாமல் அப்படியே அதை ஏற்றுக் கொள்வதும், பாலியல் பிழைகளில் விழுந்து விடாமல் இருப்பதும் அப்னேரின் வாழ்க்கை நமக்குச் சொல்லும் முக்கியமான இரண்டு பாடங்களாகும்.